கூகுள் நிறுவனத்தின் பிக்சல் போன்கள்... இன்னும் 3 மாதங்களில் இந்தியாவில் தயாரிக்க முடிவு


கூகுள் நிறுவனத்தின் பிக்சல் போன்

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட் போன்கள் அடுத்த காலாண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கின்றன.

கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய இருப்பதாகவும், அதன் முதன்மை தயாரிப்பான பிக்சல் 8 போன்கள் 2024-ம் ஆண்டில் கிடைக்கும் எனவும் கடந்த அக்டோபரில் கூறி இருந்தது. கூகுளின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட் தற்பொது அதனை உறுதி செய்துள்ளது.

கூகுள்

இந்தியாவின் பரந்த சந்தையும், மக்களின் அதிகரிக்கும் வாங்கும் திறனும் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கக்கூடியவை. தங்கள் தயாரிப்புகளை இந்தியாவில் சந்தைப்படுத்தவும் அவை முயன்று வருகின்றன. அதிலும் அண்மைக்காலமாக சீனாவில் தயாரிப்புக் கூடங்களை வைத்திருந்த உலக நிறுவனங்கள் பலவும், மேற்கு நாடுகளுடனான சீனாவின் உரசல் காரணமாக அருகிலிருக்கும் இந்தியாவுக்கு தாவி வருகின்றன.

இவற்றுக்கு அப்பால் இந்திய பின்புலத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்றது முதலே இந்தியாவுடனான கூகுள் நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் பலவும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக கூகுளின் பிரத்யேக பிக்சல் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் தயாரித்து சந்தைக்கு வர இருக்கிறது. அடுத்த 3 மாதங்களில் இதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட இருக்கின்றன.

சுந்தர் பிச்சை

இதற்காக வட இந்தியாவில் ஒன்றும், தென்னிந்தியாவில் ஒன்றுமாக 2 தொழிற்கூடங்களை கூகுள் அமைக்க இருக்கிறது. இந்த வகையில் மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கூகுள் தயாரிப்புகள் முதன்மை பெறும். தற்போது இந்தியாவில் கிடைக்கும் பிக்சல் போன்கள் அனைத்தும் இறக்குமதியானவை. இனி இந்தியாவிலேயே அவை தயாரிக்கப்படும் என்பதால் பிக்சல் போன்களின் விலை குறையவும் வாய்ப்பாகி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x