இந்தியாவின் ஏஐ புரட்சிக்கு வித்திடுவாரா ‘ஹனுமன்’... அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறார்


பார்த் ஜிபிடி

சாட்ஜிபிடி என்பதன் இந்திய பதிப்பாக திட்டமிடப்பட்டிருக்கும் ’ஹனுமன்’, மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

பாரத் ஜிபிடி குழுமம் என்பது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆதரவுடன், இந்தியாவின் பல்வேறு ஐஐடி நிறுவனங்களின் பின்புலத்தில் இயங்குவது. ஏஐ புரட்சிக்கு ஈடுகொடுத்து இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு சாட்பாட் மற்றுன் செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளை வெளியிட பாரத் ஜிபிடி குழுமம் திட்டமிட்டுள்ளது.

சாட்ஜிபிடி ஓபன்ஏஐ

பாரத் ஜிபிடி குழுமத்தினர் மற்றும் 8 ஐஐடி நிறுவனங்களின் மென்பொருள் விற்பன்னர்கள் இணைந்து, இந்தியாவுக்கான சாட்ஜிபிடி மாதிரியாக ஒன்றை உருவாக்கி அதற்கு ஹனுமன் என பெயரிட்டுள்ளன. நாட்டின் சுகாதாரம், நிர்வாகம், நிதிச் சேவைகள் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் 11 உள்ளூர் மொழிகளில் இந்த சாட்பாட் செயல்பட உள்ளது. இவற்றுக்கு அப்பால் பயனர்களின் தேவைக்கேற்பவும் சேவையாற்ற ஹனுமன் காத்திருக்கிறார்.

இன்று சகல துறைகளும் செயற்கை நுண்ணறிவான ஏஐ வசம் மாறி வருகின்றன. அந்த வகையில் உருவான ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி மற்றும் கூகுளின் ஜெமினி ஆகியவை பெரும் புரட்சிக்கு வித்திட்டிருக்கின்றன. அவற்றுடன் இணைந்து பயணிக்காது போனால் பின்தங்கிப் போவோம் என பல்வேறு துறையினரும் ஏஐ துறையில் பாய்ச்சல் காட்டி வருகின்றனர். இவ்வாறு முயற்சிக்கும் இந்தியர்களுக்கு ஹனுமான் உதவிக்கரம் நீட்ட இருக்கிறார்.

முகேஷ் அம்பானி

ஓப்பன் சோர்ஸ் என்ற அடிப்படையில் ஹனுமான் கிடைக்கப்போவதால், கட்டணமின்றி இலவசமாக அதனை அணுகிப் பயன்பெறலாம். உதாரணத்துக்கு ஒருவரது நீண்ட உரையை கட்டுரையாக சடுதியில் மாற்ற ஹனுமான் உதவுவார். முன்னோடியாக ஜியோ நிறுவனம் ஹனுமானை பயன்படுத்தி பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ‘ஜியோ பிரைன்’ என்று பெயரிடப்பட்ட தளத்தின் உதவியால், தனது 45 கோடி சந்தாதாரர்களும் செயற்கை நுண்ணறிவு சேவையில் பயன்பெற உதவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x