பாம்பன் பழைய ரயில் தூக்கு பாலத்தை என்ன செய்ய போகிறது ரயில்வே நிர்வாகம்?


ராமேசுவரம்: புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகள் நிறைவடைந்து, அக்டோபர் மாதத்தில் ராமேசுவரத்துக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில், நூற்றாண்டு பழமையான பாம்பன் பழைய ரயில் தூக்குப்பாலம் தொடர்பாக பொதுமக்கள், பயணிகளிடம் கருத்துக் கேட்பதற்கு, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில், பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையே கடலில் ரயில் பாலமும், அப்பாலத்தின் நடுவே கப்பல் கடந்து செல்லும் வகையில் தூக்குப் பாலம் கட்டவும், நாட்டின் தனுஷ்கோடிக்கும், இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கும் சிறு கப்பல் போக்குவரத்து நடத்தவும், கி.பி.1911-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசு ஒப்புதல் அளித்தது. பாம்பன் ரயில்வே பாலப் பணிகள் கி.பி.1911 ஜூன் மாதம் தொடங்கி இரண்டே ஆண்டுகளில் அதாவது, கி.பி.1913 ஜூலை மாதம் முடிவடைந்தது.

146 தூண்களைக் கொண்ட பாம்பன் ரயில் பாலத்தின் மொத்த நீளம் 2.2 கி.மீ. தூரமாகும். இந்த இடத்தில் கடலின் ஆழம் பாறைக்கு மேல் 6 அல்லது 7 அடிதான். இப்பாலம் கட்ட 4,000 டன் சிமென்ட், 1,36,000 கன சதுர அடி களிமண், 1,800 கன சதுர அடி மணல், 80,000 கன சதுர அடி அளவுள்ள பெரும்பாறைகள், 2,600 டன் இரும்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

1913-ம் ஆண்டு பாம்பன் ரயில் பாலம் கட்டப்படும் போது 2 ரயில் இன்ஜின்களுடன்
தூக்குப் பாலத்தின் தாங்கும் திறன் சோதிக்கப்பட்ட காட்சி.

சென்னை எழும்பூரிலிருந்து தனுஷ்கோடிக்கு பாம்பன் ரயில் பாலம் வழியாக 1914 பிப்ரவரி 24-ம் தேதி முதன்முதலாக ரயில் இயக்கப்பட்டது. தொடர்ந்து, தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தும், தலைமன்னாரிலிருந்து இலங்கையின் தலைநகர் கொழும்பு வரையிலும் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. 22.12.1964-ல் தனுஷ்கோடியை புயல் தாக்கும் வரை, சென்னை எழும்பூரிலிருந்து கொழும்பு வரையிலும் ஒரே டிக்கெட்டில் பயணிகள் பயணிக்க முடிந்தது.

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் காரணமாக, இந்த பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, பாம்பன் புதிய ரயில் பாலப் பணிகள் நிறைவடைந்து, அக்டோபர் மாதம் முதல் ராமேசுவரத்துக்கு மீண்டும் ரயில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு: பழைய பாம்பன் ரயில் பாலம் நூற்றாண்டு கால பழமையானது. தற்போது அதன் உறுதித் தன்மையும் குறைந்துகொண்டே வருகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் கப்பல்கள், பெரிய படகுகளுக்காக புதிய ரயில் பாலம் தூக்கப்படும் போதும், பழைய பாலத்தையும் தூக்க வேண்டும்.

இது பாதுகாப்பானதாக இருக்காது என்பதால், நூற்றாண்டு பழமையான பழைய ரயில் தூக்குப்பாலத்தை அதன் மூல வரைபடத்தை கொண்டு பிரித்து அகற்றி, பாம்பன் அல்லது மண்டபம் ரயில் நிலையம் அருகே காட்சிப்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள், பயணிகளிடம் கருத்துகளை கேட்பதற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

x