மின் வேலி விதிமுறைகளால் தமிழக விவசாயிகள் ‘ஷாக்’!


சட்ட விரோத மின் வேலியில் சிக்கி உயிரிழந்த யானை (கோப்புப்படம்)

கோவை: தமிழகத்தில் சட்ட விரோத மின் வேலிகளில் சிக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் மின் வேலி அமைப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியாகி ஓராண்டாகி விட்டது. மின் வேலிக்கு அனுமதி கோரி சுமார் 50 விவசாயிகள் விண்ணப்பம் செய்த நிலையில் இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கப்படாமல் உள்ளது.

அரசு வரையறுத்துள்ள விதிமுறைகளின்படி ‘எனர்ஜைசர்’ கருவிகள் சந்தையில் கிடைப்பதில்லை என்றும், ‘எனர்ஜைசர்’ கருவிகளை அரசே மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. தமிழகத்தில் 2023-ல் 2,961 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, 2024-ல் 3,063 ஆக அதிகரிப்பது தெரியவந்தது. குறிப்பாக, கோவை வனக்கோட்டத்தில் 2023 நிலவரப்படி 190 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, 2024-ல் 300-க்கும் அதிகமாக உள்ளது தெரியவந்தது.

தமிழகத்தில் மனித-வன உயிரின முரண்பாடு மிக அதிகமுள்ள பகுதியாக கோவை மாவட்டம் அறியப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 3,000 முறை யானைகள் வனத்தை விட்டு வெளியேறுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மனித-வன உயிரின முரண்பாடுகளும் பயிர் சேதமும், உயிர் சேதமும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

கடந்த 2023-ல் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக இருந்தது. நிகழாண்டில் இதுவரை 3 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். கடந்த 2023-ல் மின் வேலியில் சிக்குதல் உட்பட பல்வேறு காரணங்களால் 23 யானைகள் உயிரிழந்தன. நிகழாண்டில் 6 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயிர்களை பாதுகாக்க ஒரு சில விவசாயிகள் சட்ட விரோத மின் வேலிகளை அமைப்பதால் மின்சாரம் தாக்கி யானைகள் இறப்பது வாடிக்கையாக உள்ளது. சில நேரங்களில் தவறுதலாக மனிதர்களும் மின்சாரம் தாக்கி உயிரிழந்து வருகின்றனர்.

அந்தவகையில், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சட்ட விரோத மின்வேலிகள் மற்றும் தாழ்வு உயர் அழுத்த மின் கம்பிகளில் உரசி சுமார் 80-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. கோவை வனக்கோட்டத்தில் மட்டும் 10 யானைகள் மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளன.

வன உயிரினங்கள் விவசாய நிலங்களில் புகாமல் தடுக்க அமைக்கப்படும் சட்ட விரோத மின் வேலியில் சிக்கி யானை, மான், பன்றிகளும், சில நேரங்களில் மனிதர்களும் மின்சாரம் தாக்கி உயிரிழந்து வருகின்றனர்.

மின் வேலியில் சிக்கி வன உயிரினங்கள் உயிரிழப்பைத் தடுத்து பாதுகாக்கவும், காப்புக்காடுகளை ஒட்டிய விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பொருட்களை பாதுகாக்கவும் மின் வேலி அமைக்க கடந்த 2023-ம் ஆண்டில் தமிழக அரசு கட்டுப் பாடுகளை விதித்து அரசாணை வெளியிட்டது.

இதுதொடர்பாக, விவசாயிகள் கூறும்போது, “மின் வேலி அமைக்க ஓராண்டுக்கு முன்பு வனத்துறையில் விண்ணப்பம் செய்தேன். ஆனால், வனத்துறை இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின் வேலியில் சீரான மின்சாரம் வழங்குவதிலும் விலங்குகள் உயிரை பாதுகாப்பதிலும் ‘எனர்ஜைசர்’ எனப்படும் கருவி முக்கியமானது. இந்த ‘எனர்ஜைசர்’ கருவி குறித்த விவரக் குறிப்புகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, அரசு வரையறுத்துள்ள விதிமுறைகளின்படி ‘எனர்ஜைசர்’ கருவி சந்தையில் விற்பனைக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஏதாவது ஒரு நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செய்து தான் கருவிகளை உற்பத்தி செய்து தர வேண்டும். இதுபோன்ற மின் வேலிகளை பெரு நிறுவனங்கள் மட்டுமே செலவு செய்து அமைக்க முடியும். சாதாரண விவசாயிகள் அதிக செலவு செய்து மின் வேலி அமைக்க முடியாது. சிலர் ஜெர்மனி உட்பட வெளிநாடுகளில் இருந்து ‘எனர்ஜைசர்’ கருவியை அதிக விலைக்கு வாங்கி மின் வேலி அமைத்துள்ளனர். வனத்துறையினர் இன்னும் வந்து ஆய்வு செய்யாமல் உள்ளனர். மின் வேலி அமைக்கும் நடைமுறை சிக்கலை அரசு களைந்து, மானியம் வழங்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து, இயற்கை மற்றும் வன உயிரின பாதுகாப்பு அமைப்பின் ஆர்வலர்கள் கூறும்போது, “சட்ட விரோத மின்வேலியில் சிக்கி யானை, பன்றி, மான்கள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும். இதற்காக விளைநிலங்களில் ஆய்வு செய்து சட்ட விரோத மின் வேலியின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் வேலி அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு அமல்படுத்திட முனைப்பு காட்ட வேண்டும். அதில் நடைமுறை சிக்கலை தீர்க்க வேண்டும். இதன்மூலம் விவசாயிகளின் நிலங்களில் பயிர்களை பாதுகாக்கவும், மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழக்காமல் தடுக்கவும் முடியும்” என்றனர்.

ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறும்போது, “விளைநிலங்களில் நேரடியாக மின் இணைப்பு தரும்போது யானைகள் மின்சாரம் பாய்ந்து இறந்து விடுகின்றன. எனவே, யானைகள் உயிரிழக்காமல் மின் அதிர்வு மட்டும் ஏற்படவைக்கும் ‘எனர்ஜைசர்’ கருவிகளை அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பது தடுக்கப்படும்” என்றார்.

கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கோவை வனக்கோட்டத்தில் மின் வேலி அமைக்க சுமார் 50 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மின் வேலியில் சிக்கி வன உயிரினங்களை தடுக்கும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஓராண்டில் மின்வாரியத்துடன் இணைந்து 2000 இடங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம். மின் வேலி அமைப்பதில் ‘எனர்ஜைசர்’ கருவியில் 12 வோல்ட் மின்சாரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மின்வாரிய உதவி செயற்பொறியாளர்களின் இறுதி அறிக்கை பெறப்பட்டு அனுமதி வழங்கப்படும்” என்றனர்.

x