உள்ளம் கொள்ளை கொள்ளும் டெக் அலுவலகங்கள்; ஹைதராபாத் மைக்ரோசாப்டை தொடர்ந்து புனே கூகுள் இணையத்தில் வைரல்


கூகுள் அலுவலகம்

புனேயில் கூகுள் அமைத்திருக்கும் கிளை அலுவலகம், அதன் விசித்திரத்தால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெக் நிறுவனங்கள் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் காலம் இது. கடந்த ஆண்டு மட்டும் உலகளவில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆனபோதும் டெக் நிறுவனங்களே பொறியியல் பட்டதாரிகளின் முதல் தேர்வாக நீடிக்கின்றன. அதிலும் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பன்னாட்டு டெக் நிறுவனங்கள் வேலை நாடுபவர்களின் கனவாக உள்ளன.

இதற்கு காரணம் பன்னாட்டு நிறுவனங்கள் அள்ளித்தரும் ஊதிய விகிதங்கள் மட்டுமல்ல, பணியிலிருக்கும் ஊழியர்களை கொண்டாடுவதும், அவர்களுக்கான அநேக வசதிகளை அலுவலகத்தில் செய்து தருவது உள்ளிட்டவையும் அடங்கும். அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த டெக் நிறுவனங்களின் கிளை அலுவலகங்களும் வரவேற்பு பெற்றுள்ளன. கடந்த வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹைதராபாத் அலுவலகம் இவ்வாறு இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் மைக்ரோசாப்ட் அலுவலகம்

ஹைதராபாத் மைக்ரோசாப்ட் அலுவலகத்தில், 24 மணி நேர உணவகம், உடற்பயிற்சிக் கூடம், குட்டித் தூக்கம் போட வசதியாக ஓய்விடம், ஹோம் தியேட்டர், விளையாட்டு அறை உள்ளிட்டவை அந்த வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அதே போன்று தற்போது வெளியாகி உள்ள புனே கூகுள் அலுவலகத்தில் விளையாட்டு அறை, மசாஜ் நாற்காலி, இலவச சிற்றுண்டி, கண்கவர் ஓய்விடம் உள்ளிட்டவை இன்ஸ்டாவில் வெளியாகி உள்ளன.

பணியாளர்களின் வாழ்க்கை - பணி இடையிலான பள்ளத்தை கூடுமானவரை நிரவுதல் மூலம், அவர்களிடமிருந்து ஆகச் சிறந்த திறனை கறப்பதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வேகம் காட்டுவதே இவற்றின் பின்னால் இருக்கின்றன. இருக்கையை தேய்க்கும் சோம்பலான அலுவலகச் சூழல் மற்றும் அது தரும் அழுத்தங்களை தவிர்ப்பதன் மூலம், மேற்படி பணியாளர் திறனை கறப்பதிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வித்தியாசம் காட்டுகின்றன. மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற உலகின் தலைசிறந்த டெக் நிறுவனங்கள் இதிலும் முதன்மை வகிப்பதில் வியப்பில்லை.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் விஜய் கட்சியினர் மீது வழக்குப் பாய்ந்தது... கொடியும் அகற்றம்!

x