25 ஆண்டுகளை கடந்தும் நிறைவேறாத மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை!


மதுரை- தூத்துக்குடி புதிய ரயில் பாதையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேலக்கரந்தை ரயில் நிலையம்

மதுரை: மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தற்போது வாஞ்சிமணியாச்சி, மீளவிட்டான் வழியாக ரயில் வழித்தடம் பயன்பாட்டில் உள்ளது. இதன் வழியாகவே தூத்துக்குடிக்கு தற்போது, பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த இரு நகரங்களுக்கிடையே சாலை பயணத்தைவிட ரயிலில் சென்றால் நேரமும் தூரமும் அதிகம். மேலும் தென்மாவட்டங்களுக்கும், கேரள மாநில நகரங்களுக்கும் செல்லும் ரயில்கள் அனைத் தும் செல்லும் வழித்தடம் என்பதால் தூத்துக் குடிக்கு கூடுதல் ரயில்களை இயக்க முடியாத நிலை உள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக மதுரை யிலிருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. 1999-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மதுரை ரயில் நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம், பாறைப்பட்டி, ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், குளத்தூர், மேல்மருதூர், வாலசமுத்திரம், சில்லாநத்தம், சாமிநத்தம், தட்டப்பாறை, மீளவிட்டான், தூத்துக்குடி என 143 கி.மீ. தூரத்துக்கு ரூ.600 கோடியில் புதிய அகல ரயில் பாதை அமைக்க ஆய்வுகள் நடத்தப்பட்டன.

மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்கள் வழியாக நிறைவேற்றப்பட வேண்டிய இத்திட்டம், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் மீளவிட்டானில் இருந்து மேல்மருதூர் வரையிலும் 18 கி.மீ.க்கு பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன.

மேலும் அத்தடத்தில் புதிய ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டு, அதிவேக ரயில் சோதனையும் நடத்தப்பட்டு சில ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இன்னும் நிலம் கையகப்படுத்தும் பணிகளே முடியவில்லை. இதனால் பணிகள் நிறை வடைந்த பாதையும் பயனற்று கிடக்கிறது.

மீளவிட்டான் அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம்

மேல்மருதூர்-திருப்பரங்குன்றம் வரை நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் தொடர்ந்து பணியில் தொய்வுநிலை உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. சில ஆட்சேபம் காரணமாக நிலம் கையகப்படுத்தும் பணிகளை கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இதனால் இத்திட்டத்துக்காக ஏற்கெனவே செலவிடப்பட்டுள்ள பல கோடி ரூபாய் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்துக்கான நில எடுப்பு பணியை வேகப்படுத்த மதுரை, விருதுநகர் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அக்கறை காட்ட வேண்டும் என ரயில் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்திட்டம் குறித்து ரயில்வே பொறியியல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை-தூத்துக்குடிக் கான புதிய 143 கி.மீ. வழித்தடத்தில் தூத்துக்குடி-மீளவிட்டான் வரை ஏற்கெனவே ரயில் பாதை உள்ளது. மீளவிட்டான்-மேல் மருதூர் வரை பணி முடிந்து ரயில் சோதனை ஓட்டமும் முடிந்துள்ளது.

காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக மேல்மருதூர்-திருப்பரங்குன்றம் இடையே மட்டுமே புதிய பாதை அமைக்கும் பணி எஞ்சியுள்ளது. இவ்வழித்தடத்தில் மதுரை-தூத்துக்குடி இடையே 10 புதிய ரயில் நிலையங்களும் உருவாக்கப்பட உள்ளன.

இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் தங்களது விளைபொருட்களை தூத்துக்குடி துறைமுகத்துக்கும், பிற ஊர்களுக்கும் எளிதில் கொண்டு செல்ல முடியும். அருப்புக்கோட்டை ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உருவாகவும் வாய்ப்புள்ளது.

இத்திட்டத்துக் கென மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 840 ஹெக் டேர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும். முழுமையாக கையகப்படுத்த முடியாத சூழலில் மேல்மருதூர்-அருப்புக்கோட்டை-திருப்பரங்குன்றம் வரை நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ரயில்வே நிர்வாகத்தில் இருந்து சம்பளமும் வழங்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீடு விவரம் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. மதுரை-தூத்துக்குடி புதிய வழித்தடத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு எனத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பணியை தீவிரப் படுத்துவோம். யார் ஆட்சேபம் தெரிவித்தாலும் இத்திட்டம் உறுதியாக நிறைவேற்றப் படும், என்று கூறினார்.

x