காலையில் கண்விழித்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை, இந்தியர்களை ஆட்டிப்படைக்கும் செல்போன் பயன்பாடு மோகம் கவலைக்குரியதாக மாறி வருகிறது. அது குறித்தான ஆய்வுத் தகவல்கள் இந்தியர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டக்கூடியவை.
84 சதவீத இந்தியர்கள் காலையில் கண்விழித்த கால் மணி நேரத்தில் தங்கள் ஸ்மார்ட்போனை நோண்ட ஆரம்பித்து விடுகின்றனர். 10 வருடங்களுக்கு முன்னர் இந்தியர்கள் மத்தியில் இருந்த தினசரி செல்போன் பயன்பாட்டு நேரம் 2023-ல் இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்தியர்கள் சராசரியாக தினத்துக்கு 80 முறை தங்களது செல்போனை எடுத்து ஆராய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சிகரமாகவோ, ஆச்சரியமாகவோ இருக்கக்கூடும்.
இவையெல்லாம் போஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற ஆய்வு நிறுவனத்தின் தரவுகளில் வெளிப்பட்டுள்ளன. செல்போன் பயன்பாடு என்பது உலகளவில் அதிகரித்து வருகிறது. நவீன அறிவியலின் துணையாக, மனிதர்களின் கரங்களில் தவிர்க்க இயலாத உபகரணமாக செல்போன் மாறி உள்ளது. அறிமுகமான புதிதில் வெறும் தகவல்தொடர்பு சாதனமாக மட்டுமே இருந்த செல்போன், ஸ்மார்ட்போன் என்ற அடையாளத்தில் சகலத்தையும் உள்ளங்கையில் உள்ளடக்கி வளர்ந்துள்ளது. ஸ்மார்ட்போன் என்பதன் நேர்மறை பயன்பாடுகள் அனேகம். மாறாக செல்போனை எதிர்மறை நோக்கில் பயன்படுத்தி அதற்கும் அடிமையாகும் போக்கே இளம் வயதினர் மத்தியில் காணப்படுகிறது.
இந்தப் போக்கு வளரும் தேசமான இந்தியாவில் மிதமிஞ்சிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தியர்களைப் பொறுத்தளவில் உள்ளங்கைக்குள் அனைத்தையும் சுருக்கும் ஸ்மார்ட்போன் சாதனமும், கட்டற்ற வேகத்திலான இணையமும் அவர்களது அன்றாடங்களை திக்குமுக்காடச் செய்துள்ளன. இதன் விளைவாக குழந்தைகள் முதல் பெரியோர் வரை ஸ்மார்ட்போன் மாயையில் சிக்கி அலைக்கழிந்து வருகின்றனர். இவற்றையே போஸ்டன் ஆய்வும் சுட்டிக்காட்டி உள்ளது.
மேலே குறிப்பிட்ட புள்ளி விவரங்களுக்கும் அப்பால், போஸ்டன் ஆய்வறிக்கையில் அதிர்ச்சிகரங்கள் தொடர்கின்றன. இந்தியர்கள் மத்தியில் செல்போனுடன் செலவழிக்கும் நேரத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக யூடியூப், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களிலேயே செலவழிக்கின்றனர். விழித்திருக்கும் நேரத்தில் 31 சதவீதம் ஸ்மார்ட்போனிலேயே கழிகிறது. செல்போனில் பேசுவது, தகவல் அனுப்புவது ஆகியவற்றுக்கு அப்பால் சமூக ஊடகங்களில் சஞ்சரிக்கும் நேரம் அதிகரித்து வருகிறது.
இவற்றுக்கு அடுத்தபடியாக இணையத் தேடல், விளையாட்டு, மின் வணிகம், பணப்பரிவர்த்தனை ஆகியவை வருகின்றன. கடைசியாகவே அறிவு சுரங்கமான செய்திகள் மற்றும் வாசிக்கும் போக்கு ஸ்மார்ட்போனில் இடம்பெறுகிறது. 18 முதல் 24 வயது வரையிலானோர் மத்தியில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய தளங்களில் ரீல்ஸ் பார்க்கும் போக்கும் 35 வயதுக்கு மேற்பட்டவர்களைவிட அதிகமாக காணப்படுகிறது. தினசரி போனை கையில் ஏந்தி துழாவுவதில், இரண்டில் ஒரு முறை அநாவசியமாகவே அமைகிறது.