பேடிஎம் பேமெண்ட் வங்கி சேவைகளுக்கு அவகாசத்தை மேலும் நீட்டித்து, ஆர்பிஐ புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக பேடிஎம் பேமெண்ட் வங்கி சேவைக்கு தடை திடீர் விழுந்தது. பேடிஎம் சேவைகளை பிப்.29 உடன் நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதனை அடுத்து பேடிஎம் பேமெண்ட் வங்கியில் இருப்பு வைத்திருந்தோர், முக்கியமான பணப்பரிவர்த்தனை மேற்கொள்வோர் குழப்பமடைந்தனர். ரிசர்வ் வங்கியின் உத்தரவால் பேடிஎம்மின் எந்தெந்த சேவைகள் கிடைக்கும், எவை கிடைக்காது என்ற கேள்விகளும் பொதுவெளியில் எழுந்தன.
அந்த ஐயங்களுக்கு ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து விளக்கமளித்து வருகிறது. பேடிஎம் பேமெண்ட் வங்கி நிறுவனத்தின் சார்பிலும் அதன் வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதிய சேவைகளுக்கு மட்டுமே ரிசர்வ் வங்கி தடை விதித்திருப்பதாகவும் பிப்.29 காலக்கெடுவுக்கு பின்னரும் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கிலுள்ள தொகையை வேண்டும்போது எடுத்துக்கொள்ளலாம் என பேடிஎம் அறிவித்தது. ரிசர்வ் வங்கியும் இதனை உறுதி செய்தது.
ஆனால் வழக்கமான சேவை சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு பேடிஎம் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஃபாஸ்ட்டேக் சேவைக்கான அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலில் இருந்தும் தற்போது பேடிஎம் நீக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பேடிஎம் நிறுவனத்தின் பின்னணியில் சீன முதலீடு மற்றும் நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசு ஆராய்ந்து வருவதாகவும், அதன் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைகள் தொடர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவற்றை பேடிஎம் மறுத்து வந்தது.
இதனிடையே பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, பேடிஎம் கணக்கில் பணம் செலுத்துதல், கடன் பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்கான அவகாசத்தை மார்ச் 15 வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு பேடிஎம் கணக்கில் பணம் செலுத்துதல், கடன் பரிவர்த்தனை ஆகியவை செய்ய இயலாது. மற்றபடி தங்கள் கணக்கில் உள்ள தொகையை திரும்ப எடுப்பது, அதற்கான வட்டி, கேஷ்பேக் ஆகியவற்றை பெறுவதில் எந்த தடையும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு; மு.க.அழகிரி உள்ளிட்டோர் விடுதலை!
சிறுநீரில் இருந்து மின்சாரம்... மாத்தியோசித்த பாலக்காடு ஐஐடி மாணவர்கள்!
முன்னாள் பிரதமருக்கு திடீர் உடல் நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி!
கெட்டதிலும் ஒரு நல்லது... மகன் இறப்புக் குறித்து சூர்யாவிடம் உருகிய சைதை துரைசாமி!
விவசாயிகள் போராட்டத்தில் அதிர்ச்சி... மாரடைப்பால் ஒருவர் உயிரிழப்பு!