தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாக ஆராய, குழு ஒன்றை நியமிக்க உச்ச நீதிமன்றம் முன்மொழிந்துள்ளது. இது ஸ்டெர்லைட் உருக்காலை எதிர்ப்பாளர்கள், போராட்டத்தில் உயிரை பறிகொடுத்தோரின் குடும்பத்தினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான தாமிர உருக்காலை தமிழகத்தின் தூத்துக்குடியில் அமைந்துள்ளது. சுரங்கத்தில் பெறப்படும் தாமிர கச்சாவை, உருக்கி பயன்பாட்டுப் பொருளாக மாற்ற இந்தியாவின் பல மாநிலங்களிலும் உருக்காலை தொடங்க வேதாந்தா நிறுவனம் முயன்றது. அங்கெல்லாம் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததில், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் கடைசியாக ஆலை அமைத்தது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இந்த ஆலைக்கு அப்போது தொடங்கியே மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வந்தது.
ஆலை வெளியிட்ட நச்சு காரணமாக மக்கள் மத்தியிலான பாதிப்பும், அதற்கு எதிரான மக்கள் போராட்டமும் படிப்படியாக வளர்ந்ததில், 2018-ம் ஆண்டின் போலீஸார் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஆலையின் மூடு விழாவுக்கு காரணமானது. 13 அப்பாவிகள் பலியானதன் பின்னணியில் தாமிர உருக்காலை மொத்தமாக மூடப்பட்டது. சுற்றுச்சூழல் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுத்ததாக தமிழக அரசு தெரிவித்த போதும், மக்கள் எதிர்ப்பே இதற்கு முக்கிய காரணமானது.
இடையில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது ஆக்சிஜன் தேவைக்காகவும், பின்னர் பரமாரிப்பு பணி மற்றும் கழிவுகளை அகற்றுதல் ஆகியவைக்காகவும் அவ்வப்போது ஆலை திறக்கப்பட்டது. மற்றபடி செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் ஆலையை விற்கவும் இடையில் வேதாந்தா நிறுவனம் முயற்சி மேற்கொண்டது.
இதனிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் உருக்காலை ஆலையை மீண்டும் செயல்படுத்தக் கோரி வேதாந்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம் விளைந்துள்ளது. ஆலையை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய குழுவை அமைக்கலாம் என இன்றைய(பிப்.14) விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் துறையின் பிரதிநிதி உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைப்பது குறித்தும் விசாரணையில் பரிசீலிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாலும், வேதாந்தா நிறுவனத்தின் வாதங்கள் இன்னும் முடிவடையாததாலும், உச்ச நீதிமன்ற அமர்வு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
தூத்துக்குடி ஆலை ஆண்டுதோறும் 400,000 டன் உலோக தாதுக்களை உற்பத்தி செய்தது, இந்தியாவின் தாமிர உற்பத்தியில் 40 சதவீதத்தை கொண்டிருந்தது மற்றும் 5,000 பேருக்கு நேரடியாகவும், 25,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தந்தது உள்ளிட்டவற்றை வேதாந்தா தரப்பு முன்வைத்து வாதிட்டு வருகிறது.
வேதாந்தா நிறுவனத்துக்கு சாதகமாக உச்ச நீதிமன்ற வழக்கின் போக்கு அமைந்ததால், பங்குச்சந்தையில் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் சுமார் 3 சதவீதம் வரை இன்றைய தினம் உயர்ந்து வர்த்தகமாயின.
இதையும் வாசிக்கலாமே...
'ஒரே நாடு ஒரே தேர்தல்' கூட்டாட்சிக்கு எதிரானது... சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம்!