மருத்துவமனையில் மார்க் சக்கர்பெர்க்... ஃபேஸ்புக் சி.இ.ஓ-க்கு என்னாச்சு?


மார்க் சக்கர்பெர்க் - மருத்துவமனையில்

மருத்துவமனையில் மார்க் சக்கர்பெர்க் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அவரது நிர்வாகத்தின் கீழான சமூக ஊடகங்களில் இன்று மார்க் குறித்தான விவாதங்களே களைகட்டியுள்ளன.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் மார்க் சக்கர்பெர்க். கலப்பு தற்காப்புக் கலைப் போட்டிகளில் ஆர்வம் கொண்ட மார்க், அடிக்கடி அவற்றுக்கான பயிற்சிகள் மற்றும் போட்டிகளில் பங்கேற்று அடிவாங்குவதும் பின்னர் அவற்றுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்வதும் வழக்கம்.

சக பயிற்சியாளர்களுடன் மார்க்

தற்போது அதே போன்ற பயிற்சி ஒன்றின்போது இடது முழங்கால் மூட்டின் சவ்வு கிழிந்ததில், அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முழங்காலை பாதித்திருப்பது மோசமான உள்காயம் என்பதால் அறுவை சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து நேற்று அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனை படுக்கையில் காலில் கட்டோடு தான் படுத்திருக்கும் புகைப்படத்தை மார்க் இன்ஸ்டாவில் வெளியிட்டார். தற்காப்பு கலை பயிற்சியின்போது காயமுறுவது வழக்கம் என்ற போதும், அறுவை சிகிச்சை அளவுக்கு சென்றிருப்பது மார்க் மீது மாறா அபிமானம் கொண்டவர்களை வருந்தச் செய்திருக்கிறது.

மருத்துவமனையில் மார்க் சக்கர்பெர்க்

மார்க் விரைவில் குணமாக வேண்டும் என்று அவர்கள், அந்த புகைப்படத்தின் கீழ் பதிவிட்டு வருகின்றனர். எதிர்வரும் ஜனவரியில் மார்க் பங்கேற்பதாக இருந்த கலப்பு தற்காப்புக் கலை போட்டி, இந்த அறுவை சிகிச்சை காரணமாக தள்ளிப்போகலாம் என்றும் மார்க் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மார்க் சக்கர்பெர்க், பிரேசிலியன் ஜியு-ஜிட்சு என்ற தற்காப்பு தற்காப்புக் கலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக பயிற்சி பெற்று, ஓர் அமெச்சூர் போட்டியில் வென்றுள்ளார். ஜூலை மாதம் ஜியு-ஜிட்சுவில் மார்க் ’ஊதா பெல்ட்’ பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

x