அதானியின் சொத்து மதிப்பு மீண்டும் 100 பில்லியன் டாலரைத் தாண்டியது... உலகின் 12-வது பணக்காரராக உயர்ந்தார்


கௌதம் அதானி

கடந்த வருடத்தின் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் பெரும் சரிவைக் கண்ட அதானி குழுமம், அதன் பின்னர் விரைந்து மீண்டெழுந்ததில் பில்லியன் டாலர் கிளப்புக்குள் மீண்டும் நுழைந்திருக்கிறார் கௌதம் அதானி.

இந்தியாவின் பெரும் பணக்காரரான கௌதம் அதானி, உலகப் பணக்காரர் ரேஸில் மீண்டும் குதித்திருக்கிறார். அதானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலரை கடந்ததில்(இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8,30,000 கோடி), உலகின் பெரும் பணக்காரர்களை குறிக்கும் பில்லியன் டாலர் கிளப் வரிசைக்குள் வெற்றிகரமாக மீண்டும் பிரவேசித்திருக்கிறார்.

ஹிண்டன்பர்க் - அதானி

அமெரிக்காவை சேந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை, அதானி குழுமத்தை பெரும் சரிவுக்கு ஆளாக்கியது. அதானியும் அவரது குழுமங்களும் போலியாக தங்களது பங்குகளின் மதிப்பை உயர்த்திக்காட்டி, அதன் மூலமாக சந்தை மதிப்பை உயர்த்தியதன் மூலம் புதிய கடன்களை வாங்கிக் குவித்து வருவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் சுமத்தியது. இதனால் அதானியின் குழுமப் பங்குகள் அதளபாதாளத்தில் சரிந்தன.

அதானி மீதான குற்றச்சாட்டு இந்திய அரசியலிலும் புயலைக் கிளப்பியது. பிரதமர் மோடி உடனான அதானியின் நெருக்கம், அதானிக்காக பாஜக அரசின் பாரபட்சம் உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சிகள் கிளப்பின. உச்ச நீதிமன்றத்தில் முடிவுற்ற விசாரணை, பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபியின் தொடரும் விசாரணை ஆகியவையும், அரசின் பின்புலமும், அதானி குழுமம் மீள வழி செய்தன.

அந்த வகையில் ஒரே வருடத்தில் மீண்டும் அதானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலரைத் தாண்டியிருக்கிறது. இதன் மூலமாக அவர் உலகின் 12-வது பணக்காரராக உயர்ந்திருக்கிறார். 2024-ம் ஆண்டு பிறந்தது முதலே இந்திய பங்குச்சந்தையின் மீட்சி மற்றும் புதிய உச்சங்களுக்கு அதானி குழுமத்தின் பங்குகள் அதிகம் பங்களித்து வருகின்றன. தற்போதும் தொடர்ச்சியாக எட்டாவது நாளாக அதானி குழும பங்குகள் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியுடன் அதானி

வீழ்ச்சிக்கு முன்னதாக 150 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு வரை அதானி உச்சம் தொட்டிருந்தார். 137 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கடந்தபோது, உலகின் 3வது பணக்காரராகவும் அதானி சாதனை படைத்தார். இந்த இடத்துக்கு முன்னேறிய முதல் ஆசியர் என்ற வகையிலும் அவர் தனி சாதனைக்கு சொந்தக்காரரானார். தற்போது அந்த இடத்தை நோக்கி மீண்டும் முன்னேற ஆரம்பித்திருக்கிறார். மோடி மூன்றாம் முறையாக பிரதமரானால், அதானி உலகப் பணக்காரர்களில் முதல் இடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

x