மக்கள் பங்களிப்பில் புத்துயிர் பெற்ற வேய்ந்தான்குளத்தை பாழாக்கிய நெல்லை மாநகராட்சி!


பாதாள சாக்கடை கழிவுகள் சேர்ந்து அலங்கோலமாக காட்சியளிக்கும் வேய்ந்தான்குளம்.(வலது)கழிவு நீர் கலந்ததால் வேய்ந்தான்குளத்தில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி விட்டது. படங்கள்: மு. லெட்சுமி அருண்.

திருநெல்வேலி: திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையத்தையொட்டி அமைந்துள்ள வேய்ந்தான்குளம் மக்கள் பங்களிப்புடன் புனரமைப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் பாதாள சாக்கடை கழிவுகள் சேகரமாவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள், கடைக்காரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார சீர்கேடு காரணமாக இந்த குளத்துக்கு தற்போது பறவைகள் கூட வருவதில்லை. திருநெல்வேலி மாநகரில் உள்ள நீர்நிலைகளில் முக்கியமானது வேய்ந்தான்குளம். தொடக்கத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்ட இந்த குளத்தை ஆக்கிரமிப்பு செய்து புதிய பேருந்து நிலையம், ஊரக வளர்ச்சித் துறை மகளிர் திட்ட கட்டிடம், நெடுஞ்சாலைத் துறை பயணியர் விடுதி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன.

அத்துடன் குளத்தை சுற்றியுள்ள பகுதிகள் வீடுகள் கட்டுவதற்காகவும், கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், உணவகங்கள் கட்டுவதற்காகவும் பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன. மீதமுள்ள இடத்திலும் கட்டுமானங்களை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தது.

தூர் வாரி புனரமைப்பு: மாநகரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்கு முக்கிய காரணியாக இருந்த வேய்ந்தான்குளத்தை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைய வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதனை தூர் வாரி சீரமைத்து பராமரிப்பு செய்ய வேண்டியது அவசியம் என்பதை அப்போதைய அண்ணா பல்கலைக் கழக முதல்வர் டாக்டர் சக்தி நாதன், திருநெல்வேலி மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஷில்பா சதீஷ் பிரபாகரிடம் வலியுறுத்தினார். இதையடுத்து இந்த குளத்தை பராமரிக்க ஆட்சியர் அனுமதியுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குளத்துக்கு பராமரிப்பு கமிட்டி அமைத்து மாவட்ட ஆட்சியர், பராமரிப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள், தன்னார்வலர்களின் பங்களிப்புடன் குளத்தை மராமத்து செய்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 52 ஏக்கர் பரப்பளவில் குளம் தூர்வாரி புனரமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள 14 குளங்கள் மாநகராட்சி பராமரிப்பு செய்ய வசதியாக ஒப்படைக்கப்பட்டது. என்ஜிஓ காலனி பகுதியில் 3 குளங்கள் மக்கள் பங்களிப்பு மூலம் தூர்வாரி சீரமைத்து பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

பறவைகள் வருகை: இந்நிலையில் முன்னாள் ஆட்சியர் விஷ்ணுவின் முயற்சியால் பல்வேறு நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதிமூலம் குளத்தில் நீர் கொள்ளளவை 14.5 கன அடியாக உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மழைக் காலத்தில் பாதாளச்சாக்கடை கழிவு நீர் குளத்துக்கு வருவதை அறிந்து , அதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கழிவுநீர் இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்யப் பட்டது. இதனால் குளத்தில் நீர்பெருகி பறவைகள் அதிகம் வரத்தொடங்கின. குளத்தில் நீர் இருந்த காலத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகம் வருவதை இந்த பகுதி மக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

கழிவுகள் கலப்பதால் துர்நாற்றம்: இந்நிலையில் தற்போது வேய்ந்தான்குளம் பாதாள சாக்கடை கழிவுகள் சேகரமாகும் இடமாக மாறி விட்டது. குளத்திலுள்ள தண்ணீர் பச்சை நிறமாக மாறி விட்டது. அத்துடன் சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் குடியிருப்போர், கடைகளை நடத்துவோர் என்று அனைத்து தரப்பினரும் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். குளத்தை மராமத்து செய்து புனரமைக்க பாடுபட்ட இயற்கை ஆர்வலர்களை இது வேதனை அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக இயற்கை ஆர்வலர் சாமி நல்லபெருமாள் கூறியதாவது:

கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த மழையில் பாதாளச் சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, மழைநீர் வாருகாலில் அதிக சாக்கடை நீர் வந்து குளத்தில் சேர்ந்துவிட்டது. இதனால் குளம் முழுவதும் பச்சை நிறமாக மாறி புதிய பேருந்து நிலையம் முதல் பெருமாள் புரம் வரை பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. குளத்தை ஒட்டி உள்ள வீடுகளில் குடியிருப்போர் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். குளத்து நீரை அகற்றி மீண்டும் தூர்வாரி சீரமைத்து பராமரிப்பு செய்தால் மட்டுமே இந்த பகுதி நிலத்தடி நீர் மாசடைவதை தடுக்க முடியும்.

மாநகராட்சி அலட்சியம்: மாநகரில் பல்வேறு இடங்களில் 600அடி வரை ஆழ்துளை கிணறு அமைத்தும் நிலத்தடி நீர் கிடைக்காததால் தான் இங்குள்ள குளங்களை மக்களே பராமரிக்க முன்வந்தனர். அவ்வாறு தான் இந்த குளத்தையும் மக்கள் பங்களிப்புடன் சீரமைப்பு செய்தனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் சாக்கடை நீர் குளத்துக்கு வந்து தண்ணீர் மாசடைந்து உள்ளது. இதன் மூலம் அருகில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீரும் மாசு பட வழிவகுத்துள்ளது.

நோய் பரவவும் வழிவகை செய்கிறது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் குளத்துக்கு வரும் மழைநீர் கால்வாயை சீரமைப்பதுடன் குளத்து நீரை இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்ய வேண்டும். ஆங்காங்கே பாதாள சாக்கடை மேன்ஹோலை உடைத்து கால்வாயில் கழிவுநீரை விடுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து மக்கள் நலன் காக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனிடையே வேய்ந்தான்குளத்தின் அவலம் குறித்து சமூக ஊடகங்களில் செய்தி பரவியதை அடுத்து மாநகராட்சி நிர்வாகம் வெறுமனே பிளீச்சிங் பவுடரை குளத்தில் தூவுவதற்கு நடவடிக்கை எடுத்தது. அதன் பிறகு மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காதது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.