ஆன்லைன் வணிகதளமான ஃப்ளிப்கார்ட்டில், ரூ1 லட்சம் மதிப்பிலான சோனி டிவிக்கு பணம் செலுத்திய வாடிக்கையாளருக்கு, சாதாரண தாம்சன் டிவி அனுப்பப்பட்டுள்ளது.
பண்டிகை காலம் வந்தாலே வணிக நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை அறிவித்து, வாடிக்கையாளர்களை வலைவீசி இழுக்க ஆரம்பித்துவிடும். இது ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும். முன்னணி இ-வணிக நிறுவனங்களான ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவை போட்டியிட்டு ஆஃபர் மழையை பெய்து வருகின்றன. வாடிக்கையாளர்களும் விட்டில்களாக அந்த அறிவிப்புகளில் மயங்கி விழுந்து வருகின்றனர்.
தள்ளுபடி விலை, கூடுதல் சலுகை என வணிக தளங்களின் அறிவிப்புகள் வாடிக்கையாளர்களை யோசிக்க விடுவதில்லை. இப்படித்தான் ’பிக் பில்லியன் டே’ என்ற பெயரில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் அறிவிப்புக்கு ஏராளமானோர் மயங்கி அதன் இணையதளத்தில் மொய்த்தனர். ஆர்யன் என்ற பெயரில் ட்விட்டரில் தனது வேதனை பதிவிட்டிருக்கும் நபரும் அவர்களில் ஒருவர்.
உலகக்கோப்பை டிவி போட்டிகளை அகன்ற திரையில் பார்க்க விரும்பிய ஆர்யன், ஃப்ளிப்கார்ட் தளத்தில் சலுகை விற்பனை அறிவிப்புகளில் அலசி ஆராய்ந்து சோனி டிவி ஒன்றை தேர்ந்தெடுத்தார். அதன் விலை ரூ1 லட்சம் என்றபோதும், அது கொடுக்கும் காட்சி அனுபவத்தை நம்பி ஆன்லைனில் பணம் செலுத்தினார். அதன்படி ஃப்ளிப்கார்ட் அனுப்பிய சோனி டிவி அதற்கான பெட்டியில் பத்திரமாக பேக் செய்யப்பட்டு வீடு வந்தது. அதனைத் தொடர்ந்து சோனி நிறுவனத்தின் தொழில்நுட்ப பணியாளரும் ஆர்யன் வீட்டுக்கு வந்தார். இருவரும் சேர்ந்து சோனி டிவி பெட்டியை திறந்தபோது அதிர்ச்சியடைந்தார்கள்.
ரூ.1 லட்சம் சோனி டிவியை எதிர்பார்த்த அவர்கள், அங்கிருந்த சாதாரண தாம்சன் டிவியை பார்த்து கிறுகிறுத்தார்கள். சோனி பெட்டிக்குள் தாம்சன் டிவியை வைத்து அனுப்பிய ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை பலமுறை, ஆர்யன் தொடர்புகொண்டு முறையிட்டுப் பார்த்தார். எதுவும் பலனளிக்காது போகவே, ட்விட்டரில் புகைப்படங்களுடன் பதிவிட்டு ஃப்ளிப்கார்ட்டை சந்திக்கு இழுத்தார். இதனையடுத்து வேறுவழியின்றி, விரைவில் ஆர்யன் குறையை தீர்ப்பதாக ஃப்ளிப்கார்ட் உறுதியளித்துள்ளது. ஆர்யனும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.
இதையும் வாசிக்கலாமே...