பான் எண் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேலான பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் என்று வங்கிகளுக்கு வருமான வரித்துறை சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வங்கிகளில் ரொக்க பண பரிவர்த்தனை செய்வோரின் விவரங்களை, வருமான வரித்துறை சேகரித்து வருகிறது. ஒரு முறைக்கு, 50,000 ரூபாய்க்கு அதிகமாக ரொக்க பணம் செலுத்தும் வங்கி வாடிக்கையாளர்களிடம், பான் எண் பெறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே, ரொக்கப்பண பரிவர்த்தனை விவரங்களும் திரட்டப்படுகின்றன.
பான் எண் இல்லாதவர்களிடம், 50,000 ரூபாயோ அல்லது அதற்கு மேல் பணம் பெற வேண்டாம் என்ற உத்தரவு ஏற்கெனவே அமலில் இருக்கிறது. ஆனாலும், நிறைய வாடிக்கையாளர்கள், பான் எண் இல்லாமலேயே ரொக்க பண பரிவர்த்தனைக்கு அனுமதி கேட்கிறார்களாம். இந்த விஷயத்தை, வருமான வரித்துறையிடம், வங்கிகள் கொண்டு சென்றிருக்கின்றன.
அதனால் இப்படி புதிய கடிவாளத்தை வருமானவரித்துறை போட்டுள்ளதாம். அதன்படி, இனிமேல், வங்கி வாடிக்கையாளர்கள், 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேலான ரொக்க பணத்தை வங்கியில் செலுத்த வந்தால் அவர்களிடம், ஆதார் எண், வங்கி கணக்கு விவரம், முகவரி, செல்போன் போன் எண் போன்ற தகவல்களை, அதற்கான விண்ணப்பத்தில் பெற்ற பிறகே, ரொக்க பணம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை, வங்கிகளுக்கு கறாராக கண்டிஷன் போட்டிருக்கிறது.
பான் நம்பர் இல்லாதவர்களிடம், சுய விவர விண்ணப்பம் பெற்ற பிறகே, பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற வருமான வரித்துறையின் இந்த உத்தரவு, வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.