தமிழ்நாட்டின் ஆம்பூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவருக்கு ஐக்கிய அமீரகத்தின் அதிர்ஷ்ட குலுக்கலில் ஜாக்பாட் அடித்துள்ளது. இதன் மூலம் மாதம் ரூ5.5 லட்சம் என 25 ஆண்டுகளுக்கு இவர் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகிறார்.
ஆம்பூரை சேர்ந்த மகேஷ்குமார் நடராஜனுக்கு 49 வயதாகிறது. ஐடி ஊழியரான இவர் அண்மையில்தான் அமீரகத்திலிருந்து திரும்பியிருந்தார். அலுவல் நிமித்தம் 2019 முதல் 4 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து திரும்பியிருக்கிறார். வரும்போது அதிர்ஷ்ட தேவதையையும் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்.
துபாயில் எமிரேட்ஸ் ட்ரா என்ற ஜாக்பாட் குலுக்கலில் எதேச்சையாக பங்கேற்றிருக்கிறார். அத்தோடு அதை மறந்துவிட்டவரை, சில தினங்கள் இடைவெளியில் ஜாக்பாட் நிர்வாகத்தினர் அழைத்து தெரிவித்தனர். ஏதோ சொற்பத் தொகை பரிசாக விழுந்திருக்கும் என காதுகொடுத்தவருக்கு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது.
அமீரக கரன்சியான திர்ஹாம் மதிப்பில் அவருக்கு மாதந்தோறும் 25 ஆயிரம் கிடைக்கும் என்றும், அது 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மகேஷ்குமார் நடராஜன் இதை எதிர்பார்க்கவில்லை. திர்ஹாம் மதிப்பில் 25 ஆயிரம் என்பது இந்திய ரூபாயில் சுமார் ஐந்தரை லட்சம்.
மகேஷ்குமார் நடராஜன் மிகவும் எளிய பின்னணியில் இருந்து வந்தவர். பலரின் உதவியாலும், நல்லெண்ணத்தாலும் இவரது கல்வி கனவுகள் நிறைவேறி இருக்கின்றன. அதே போன்று தானும் பிறரது கல்விக்கு உதவ வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் சாமானியர்களின் குடும்ப நெருக்கடிக்கு மகேஷ்குமார் நடராஜனும் விதிவிலக்கல்ல.
துபாய் ஜாக்பாட் மூலம் அந்த நிலைமை மாறியிருக்கிறது. மகள்களின் கல்வி மற்றும் எதிர்காலத்துக்கு அப்பால், பிறரது கல்விக்காக தனது பரிசுத் தொகையில் கணிசமாக செலவிடப்போவதாக அவர் தெரிவித்திருக்கிறார். அப்படியெனில் அதிர்ஷ்ட தேவதை சரியான நபரையே அடைந்திருக்கிறது என்று சொல்லலாம்.