நாடு 1947-ல் சுதந்திரம் பெற்ற போதிலும், குடியரசு தினம்,சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மாநில ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கமாக இருந்தது. இந்த சூழலில், தமிழக முதல்வராக கடந்த 1969-ல் பதவியேற்ற கருணாநிதி, ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார்.
இதன் தொடர்ச்சியாக, சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் உரிமையை மாநில முதல்வர்களுக்கு வழங்குமாறு பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார். அவரது கோரிக்கையை இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார். சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்களும், குடியரசு தினத்தில் ஆளுநர்களும் கொடி யேற்றும் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1974 சுதந்திர தினத்தில் தமிழக முதல்வராக தேசியக் கொடியை ஏற்றினார் கருணாநிதி.
காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான கே.அனுமந்தய்யா, அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்தபோதே இந்த கோரிக்கையை முன்வைத்தார். அப்போது அது ஏற்கப்படாததால், சுதந்திர தினத்திலும் மாநிலங்களில் ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்தனர். கருணாநிதியின் முயற்சியாலேயே 1974-ம் ஆண்டு முதல், தேசியக் கொடி ஏற்றும் உரிமை, மாநில முதல்வர்களுக்கு கிடைத்தது.
சாதனை பிரதமர்கள்: நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1947-ம் ஆண்டு முதல் 16 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்தார். 1947-ல் முதலாவது சுதந்திர தினம் தொடங்கி 1963 ஆகஸ்ட் வரை தொடர்ச்சியாக 17 முறை சுதந்திர தின உரையை நிகழ்த்தியுள்ளார். அவரது மகளான இந்திரா காந்தி 1966-1977 மற்றும் 1980-1984 என இரண்டு முறை பிரதமராக இருந்தார். இவர் 16 முறை சுதந்திர தின உரை நிகழ்த்தியுள்ளார்.
இதில் 11 முறை தொடர்ச்சியாக உரை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 10 முறை உரை நிகழ்த்தி இருந்தார். அந்த சாதனையை கடந்த ஆண்டில் சமன் செய்த தற்போதைய பிரதமர் மோடி, தொடர்ந்து 11-வது முறையாக இன்று நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.