டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் இந்தியர்கள் தான் பெஸ்ட்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்!


மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அமெரிக்காவில் 3 ஆண்டுகளில் செய்யும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை, இந்தியர்கள் ஒரே மாதத்தில் செய்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நைஜீரியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம், ஜனவரி 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்திய-நைஜீரிய கூட்டு சந்திப்பில் பங்கேற்கும் அவர், நைஜீரிய நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சருடன் உரையாற்ற உள்ளார். முன்னதாக உகாண்டா நாட்டில் நடைபெற்ற அணி சேரா நாடுகள் மாநாட்டில் பங்கேற்று அவர் உரையாற்றி இருந்தார்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை

அப்போது ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டேரஸ் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார். இந்த நிலையில் நைஜீரிய வாழ் இந்தியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், ”இந்தியர்களின் வாழ்க்கை முறையை தொழில்நுட்பம் வாயிலாக எளிமைப்படுத்தி இருக்கிறோம். இன்றைய சூழலில் மிகவும் குறைவானவர்களே பணத்தை நேரடியாக பயன்படுத்தி பரிவர்த்தனைகள் மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் அமெரிக்காவில் 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை, இந்தியர்கள் வெறும் ஒரே மாதத்தில் செய்து விடுகின்றனர். கொரோனா தொற்று உருவானபோது இந்தியா இதிலிருந்து மீண்டு வருவது சிரமமானது என பலரும் கணிப்பு தெரிவித்தனர். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து, கொரோனா அலைகள், லாக்டவுன்கள் எல்லாவற்றையும் தாண்டி, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக மருந்துகளைத் தயாரிக்கும் பணியை இந்தியா மேற்கொண்டது” என்று தெரிவித்தார்.

பணம்

மேலும், ”உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரம் உள்ள நாடு இந்தியா தான். இந்தியாவில் எங்கு சென்றாலும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்வதை உங்களால் பார்க்க முடியும். மெட்ரோ ரயில் நிலையங்கள், சாலைகள், புதிய விமான நிலையங்கள், புதிய ரயில் சேவைகள், ரயில் நிலையங்கள் ஆகியவை வந்து கொண்டே இருக்கின்றன” என்றார்.

x