1.50 லட்ச ரூபாய்க்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு... மாற்ற முடியாமல் தவிக்கும் மூதாட்டி!


ராஜம்

மன்னார்குடியில் காலக்கெடு முடிந்தது தெரியாமல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்தை மாற்ற முடியாமல் மூதாட்டி ஒருவர் தவித்து வருகிறார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கண்ணாரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மனைவி ராஜம்(65). இவர் கணவனை இழந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கு மாதந்தோறும் அரசு வழங்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில் அவற்றை மீண்டும் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள கடந்த மாதம் 31-ம் தேதியோடு அவகாசம் முடிவடைந்தது. இதை அறியாத மூதாட்டி ராஜம் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு நேற்று முன்தினம் ஊர் திரும்பினார்.

இந்நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினா் ராஜத்திடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவா் தன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக உள்ள ரூ. 1 லட்சத்து 48 ஆயிரத்தை மாற்ற மன்னார்குடி காந்தி ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு நேற்று சென்றார்.

அங்கு வங்கி அதிகாரிகள் ரூ 2 ஆயிரம் நோட்டை மாற்றுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டதாக கூறினர். இதனால் என்ன செய்வது என தெரியாமல் ராஜம் தவித்துக் கொண்டிருக்கிறார். எனவே அப்பாவி மூதாட்டியின் அறியாமையால் நடந்த தவறை அரசு கருணை உள்ளத்துடன் பரிசீலித்து அவரது வைத்துள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

x