நிலதானம் கொடுத்த மன்னன்; 480 ஆண்டுகள் பழமையான செப்புப் பட்டயம் கண்டெடுப்பு!


கோயிலில் உள்ள செப்புப் பட்டயம்

நெல்லை மாவட்டம் இராதாபுரத்தில் உள்ள வரகுணீச்சுரமுடைய நயினார்- கல்யாண சவுந்தரி நாச்சியார் அம்மன் திருக்கோயிலில் 480 ஆண்டுகால பழமை வாய்ந்த செப்புப் பட்டயம் மற்றும் கல்வெட்டு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது.

கோயிலில் உள்ள கல்வெட்டு

இந்துசமய அறநிலையத்துறையின் திருக்கோயில் சுவடித் திட்டப்பணிக் குழுவினரின் ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சுவடித் திட்டப்பணியின் ஒருங்கிணைப்பாளரும், சுவடியியல் துறைப் பேராசிரியருமான முனைவர் சு.தாமரைப்பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார்.

”இந்துசமய அறநிலையத்துறையின் சீரிய பணியின் முன்னெடுப்பால் உருவான திருக்கோயில் சுவடித் திட்டப்பணி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இச்சுவடித்திட்டப்பணியின் மூலம் புதிதாக இராதாபுரம் வரகுணீச்சுரமுடைய நயினார்- கல்யாண சவுந்தரி நாச்சியார் அம்மன் திருக்கோயிலில் இருந்த செப்புப் பட்டயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. செப்புப் பட்டயத்தில் உள்ள செய்தி கோயில் கருவறையின் மேற்கு பக்க மணிமண்டபத்தின் மேல்பகுதியில் கல்வெட்டாகவும் வெட்டி வைக்கப்பட்டுள்ளது.

செப்புப் பட்டயமும், கல்வெட்டும் கோயில் சந்திப்பூசைக்கு ராஜா ரவிவர்மன் என்பவரால் வழங்கப்பட்ட நிலதானம் குறித்த செய்தியைப் பேசுகின்றன. இவை கி.பி.1534ம் ஆண்டில் எழுதப்பட்டுள்ளன. ராஜா இரவிவர்மனின் முழுப்பெயர் புலி பூதள வீர உதயமார்த்தாண்டன் என்பதும், இவன் சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளை ஆட்சி செய்ததாகவும் வரலாற்று வழி அறியமுடிகிறது.

தாமரைப்பாண்டியன்

இவன் சுசீந்திரம், தோவாளை, தாழக்குடி ஆகிய ஊர்களின் கோயில்களுக்கு நிலக்கொடை வழங்கியுள்ளான். இவன் கி.பி.1522 முதல் 1544 வரை மூர்த்தா நாடு பகுதியை ஆண்டுள்ளான். மூர்த்தா நாடு என்பதில் பணகுடி உள்ளிட்ட பகுதிகள் அடங்கி இருந்துள்ளன. இவன் பூசங்குடியான் என்றும் அழைக்கப்பட்டுள்ளான். மேலும் இவன் செய்துங்க நாட்டை ஆண்ட சங்கரநாராயணன் என்பவனை வென்றதாகவும் அறியமுடிகிறது.

இத்தகைய சிறப்புடைய இராஜா ரவிவர்மன் தன் பெயர் விளங்க வரகுணீச்சுரமுடைய நயினார் - கலியாண சவுந்தரி அம்மன் கோயிலுக்கு சந்திப்பூசை நடக்க நிலதானம் செய்துள்ளான். மூர்த்தா நாட்டில் உள்ள இருக்கன்துறை என்று தற்போது அழைக்கப்படும் சீவலப்பாடி நகர் என்ற இடத்தில் உள்ள சான்றான் குளம் (சாணான்குளம் என்று தற்போது வழங்கப்படுகிறது.) உள்ளிட்ட பற்றிலுள்ள நஞ்சையும் புஞ்சையும் கரைப்பற்றும் வழங்கியுள்ளான். அவன் வழங்கிய தான நிலத்தின் பெரிய நான்கு எல்லைகள் விவரம் தெளிவாகப் பட்டயத்திலும் கல்வெட்டிலும் கூறப்பட்டுள்ளன.

மேலும் இந்த நான்கு பெருஎல்லைக்கு உட்பட்ட குளமும் பூராவும் கரைப்பற்று மட்டுமல்லாமல் குளம் இரண்டிலுள்ள நஞ்சையும் புஞ்சையும் கரைப்பற்றும் மேல்நோக்கின மரமும் கீழ்நோக்கிய கிணறும் தானம் செய்யப்பட்டதாக கல்வெட்டு மற்றும் சிறப்பு பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது' என்று அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

பிரதமர் இன்று தமிழகம் வருகை... ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் நாளை வழிபடுகிறார்!

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை... பிரதமர் மோடி வருகையால் திடீர் கட்டுப்பாடு!

x