இஸ்ரோ அடுத்த பாய்ச்சல்... இந்திய விண்வெளி நிலையத்திற்கான முதல் சோதனை ஆரம்பம்


சர்வதேச விண்வெளி நிலையம்

விண்வெளியில் இந்தியா கட்டமைக்க இருக்கும் பிரத்யேக விண்வெளி நிலையத்துக்கான முதல் சோதனையை அடுத்த ஆண்டு இஸ்ரோ தொடங்க இருக்கிறது.

வல்லரசு தேசங்கள் கூட்டாக அமைத்த சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுள் முடிய இருப்பதால், அந்த நாடுகள் தமக்கென தனித்தனியாக விண்வெளி நிலையங்களை உருவாக்கத் தலைப்பட்டுள்ளன. அந்த நாடுகளுக்கு நிகராக விண்வெளியில் சாதனை படைத்து வரும் இந்தியாவும், தனக்கென தனியாக விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்தது. இந்த விண்வெளி நிலையத்துக்கான முதல் கட்ட சோதனையை, 2025-ல் தொடங்க இஸ்ரோ தயாராகி வருகிறது.

இந்தியாவின் விண்வெளி நிலைய மாதிரி - ஏஐ படம்

விண்வெளி நிலையம் அமைப்பதற்கான இலக்காக 2035-ம் ஆண்டை இஸ்ரோ நிர்ணயித்துள்ளது. மேலும் அதற்கான முதற்கட்ட பதிப்பை அமைக்கும் பணிகளுக்கு 2028-ம் ஆண்டை இலக்காக இஸ்ரோ தீர்மானித்துள்ளது. இவற்றின் மத்தியில் விண்வெளி நிலையத்துக்கான முதல் சோதனையை இஸ்ரோ அடுத்த வருடம் தொடங்குகிறது. இதனை இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

‘பாரதிய அந்தரிக்ஷ்’ என்ற பெயரிலான இந்த விண்வெளி நிலையம், இஸ்ரோவின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்களுக்கு உதவ இருக்கிறது. குறிப்பாக பல்வேறு கிரகங்களுக்கான இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் விண்வெளி பயணங்களுக்கு மையமாக அமையவிருக்கிறது.

சுமார் 25 டன் எடையில் விண்ணில் கட்டமைக்கப்பட இருக்கும் இந்தியாவின் விண்வெளி நிலையம், எதிர்கால விரிவாக்கத்தை கருத்தில் கொண்டும் திட்டமிடப்பட்டுள்ளது. மைக்ரோ-கிராவிட்டி ஆய்வுகள், சர்வதேச நாடுகளுடன் இணைந்த கூட்டு ஆராய்ச்சி மற்றும் விண்வெளி உயிரியல் மற்றும் மருத்துவம் தொடர்பான மேலதிக ஆய்வுகளை நடத்துவதற்கான மையமாகவும் இது இருக்கும்.

சர்வதேச விண்வெளி நிலையம்

இந்திய விண்வெளி நிலையத்தின் அடிப்படை மாதிரியை, 2028-ம் ஆண்டில் அதற்கான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 2035-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையத்துக்கான பணிகள் நிறைவடைந்து பாரதிய அந்தரிக்ஷ் செயல்பாட்டுக்கு வரும். 2040-க்குள் முதல் இந்தியரை நிலவுக்கு அனுப்பும் இந்தியாவின் முயற்சிக்கு இந்த விண்வெளி நிலையம் ஆதாரமாகவும், இஸ்ரோ சாதனை வரிசையில் முக்கிய மைல்கல்லாகவும் பாரதிய அந்தரிக்ஷ் செயல்பட காத்திருக்கிறது.

x