‘ஏ.ஐ’ உபயம்... ஜனவரியில் இதுவரை 7500 ஊழியர்களின் பணியை பறித்த டெக் நிறுவனங்கள்; முதலிடத்தில் கூகுள்!


இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தின் முதல் பாதியில் மட்டும் 7500 ஊழியர்களின் பணிகளை, கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட டெக் நிறுவனங்கள் பறித்துள்ளன.

கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், மாபெரும் பணிநீக்கத்துடன் இந்த ஆண்டினை தொடங்கியுள்ளன. இந்த டெக் நிறுவனங்கள், ஜனவரி மாதத்தின் முதல் பாதியில் மட்டும் இதுவரை 7500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. இவர்களில் கூகுள் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.

சுந்தர் பிச்சை

இந்த பணிநீக்கங்களின் பின்னணியில், செலவினத்தை குறைப்பது, அதனை செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வில் சேர்ப்பது உள்ளிட்ட நிர்வாகக் காரணங்களை கூகுள் சுட்டிக்காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவு தலையீடுகளால் மனித உழைப்புக்கு அவசியமின்றி போவதே, டெக் உலகின் பணிநீக்க நடைமுறைகளுக்கு காரணமாகின்றன.

கடந்தாண்டும் டெக் நிறுவனங்களின் மத்தியில் பணிநீக்க அஸ்திரத்தை கூகுள் நிறுவனமே முதலில் ஏவியது. 2023 ஜனவரியில், கூகுளின் தாய் நிறுவனமான ‘ஆல்பாபெட்’ அதன் உலகளாவிய பணியாளர்களில் 12,000 பேர்கள், அதாவது 6 சதவீதத்தினரை வேலையை விட்டு அனுப்பும் கடினமான முடிவை எடுத்தது. 2023 செப்டம்பர் நிலவரப்படி உலகளவில் 1,82,381 பணியாளர்களைக் கொண்டுள்ள, கூகுளின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய பணிநீக்கமாகும், ஆனால் இந்த பணிநீக்க நடைமுறைகள் நிறுவனத்திற்கு அத்தியாவசியமானது என்று அதன் சிஇஓ சுந்தர் பிச்சை விளக்கி இருந்தார்.

கூகுள் மற்றும் அமேசான் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த ஜனவரியின் முதல் இரு வாரங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. மேலும் அடுத்த சில மாதங்களில் ஏஐ வரவு காரணமாக கூடுதல் பணியிடங்களை குறைக்கப்போவதாகவும் அறிவித்துள்ளன.

பணி பறிப்பு

நிறுவனங்களின் பணி நீக்க நடவடிக்கைகளை ஆராயும் Layoffs.fyi என்ற கண்காணிப்பு இணையதளத்தின் தரவுகளின்படி, டெக் நிறுவனங்கள் மட்டும் இந்த ஜனவரியில் இதுவரை 7,500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. இதில் கூகுள் முதலிடத்தில் உள்ளது. அமேசான், மைக்ரோசாப்ட் ஆகியவற்றின் துணை நிறுவனங்கள் அடுத்த இடத்தில் வருகின்றான.

அமேசான் நிறுவனம் கடந்த வாரம் தனது ஸ்ட்ரீமிங் மற்றும் ஸ்டுடியோ செயல்பாடுகளில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அமேசான் மற்றும் கூகுள் இரண்டும் செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் நேரடியாகப் போட்டியிடுகின்றன. இந்த போட்டியில், செயற்கை நுண்ணறிவு கையில் பணியை ஒப்படைத்துவிட்டு, ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தும் வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...


மசூதியை இடித்து கோயில் கட்டியதில் உடன்பாடில்லை... அடுத்த சர்ச்சை கிளப்பிய உதயநிதி!

காணும் பொங்கல்... கட்சியினருக்கு ஃபுல் பாட்டில் பிராந்தியுடன் உயிருடன் கோழியைப் பரிசளித்த எம்எல்ஏ!

x