பங்குச்சந்தையில் ரத்தக்களரி... 1600 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்; ரூ.2 லட்சம் கோடி மாயம்!


பங்குச்சந்தை சரிவு

வங்கிப்பங்குகளின் தடாலடி சரிவு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய தினம் பெரும் சரிவு கண்டன.

ஹெச்டிஎஃப்சி பங்குகளின் வீழ்ச்சி, இந்திய வங்கிப் பங்குகளின் சரிவுக்கு காரணமானதில், ஒட்டுமொத்தமாக சந்தை வீழக் காரணமானது. இது தவிர்த்து உலக சந்தைகளின் சரிவும் சேர்ந்துகொள்ள இந்திய பங்குச்சந்தைகள், இன்றைய தினம் இந்த வருடத்தின் முதல் மோசமான சரிவை பதிவு செய்தன.

மும்பை பங்குச்சந்தை

நாள் வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,628 புள்ளிகள் அல்லது 2.23 சதவீதம் சரிந்து 71,500.76 ஆக முடிவடைந்தது. அதே போன்று தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 453 புள்ளிகள் அல்லது 2.06 சதவீதம் சரிந்து 21,578 என்பதில் நிலை கொண்டது. இதனால் மும்பைப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு தோராயமாக ரூ.2 லட்சம் கோடி குறைந்ததில் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச காரணங்களில் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் தொடர்பாக வெளியான கவலைகள் மற்றும் கருத்துகளால் அமெரிக்க பங்குச்சந்தை, உலகளவிலான சரிவுக்கு அடியெடுத்து கொடுத்தது. ஆசிய பங்குகளில் சீனாவின் ஷங்காய் 1 சதவீதம், ஹாங்காங்கின் ஹாங் செங் 3 சதவீதம் ஆகியவையும் உலகளாவிய பங்குச்சந்தையின் போக்கை மாற்றியமைத்தன. அவை இந்தியாவிலும் எதிரொலித்ததில், ஏற்கனவே இறக்கத்திலிருந்து பங்குகள் மேலும் சரியக் காரணமாயின.

பங்குச்சந்தை சரிவு

சீனாவைப் பொறுத்தளவில் அதன் ஏமாற்றம் அளித்த டிசம்பர் காலாண்டு ஜிடிபி தரவுகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு உள்ளிட்டவை ஆசிய பங்குச்சந்தைகளை அதிகம் பாதித்தன. சீனாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, தென் கொரியா நாடுகளின் பங்குச்சந்தைளும் சிவப்பில் தங்கள் நாள் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தன.

இந்திய பங்குச்சந்தைகளில் ஹெச்டிஎஃப்சி தொடங்கி வைத்த சரிவால், கோடக் மஹிந்திரா, ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ ஆகியவை 2 - 4 சதவீதம் சரிந்தன. தினசரி வர்த்தகர்களின் கற்பகத்தருவான ’நிஃப்டி வங்கி’ 4 சதவீதத்திற்கும் மேல் சரிந்தது. இதனையடுத்து அடுத்து வரும் நாட்களிலும் பங்குச்சந்தை தொடர் சரிவு காணும் என்ற கணிப்புகள் அடிப்படையில் பங்குகளை விற்று வெளியேறும் போக்கு அதிகரித்ததாலும் பெரும் வீழ்ச்சி நேர்ந்திருக்கிறது.

x