பிரபல யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட், எலான் மஸ்க் கோரிக்கையை ஏற்று, எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்ட வீடியோ பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.
உலகளவில் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மிஸ்டர் பீஸ்ட். தனது வீடியோ ஒவ்வொன்றையும் சிரத்தையுடனும் பெரும் பொருட்செலவிலும் உருவாக்கும் இவர், அதற்கேற்ற வருமானத்தையும் யூடியூபில் எடுத்து வருகிறார்.
அண்மையில் இவர் பொதுவெளியில் அளித்த பதில் ஒன்று, எக்ஸ் தளத்தின் அதிபரான எலான் மஸ்கை குறுக்கிடச் செய்தது. ’யூடியூப் பிரபலமான மிஸ்டர் பீஸ்ட் ஏன் தனது வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிடுவதில்லை’ என்ற கேள்விக்கு, அவர் பதில் அளித்திருந்தார்.
”என்னுடைய ஒவ்வொரு வீடியோவையும் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறேன். எக்ஸ் தளத்தில் அதனை பகிர்ந்தால், வீடியோ தயாரிப்பு செலவில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும்” என்று அந்த பதிலில் நேரடியாக தனது தயக்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். மிஸ்டர் பீஸ்டின் ட்விட்டர் பதிவாக வெளியான இந்த பதிலை எக்ஸ் பயனர்கள் வெகுவாக வரவேற்று இருந்தனர்.
ட்விட்டரை விலைக்கு வாங்கி அதனை போட்டி சமூக ஊடகங்களை விழுங்கக்கூட்டிய மாற்றங்களை எல்லாம் எலான் மஸ்க் உள்ளடக்கி வருகிறார். அவற்றில் ஒன்றாக, யூடியூபுக்கு நிகராக வீடியோக்களை பதிவிடும் வசதியையும் அறிமுகம் செய்தார்.
பதிவுகள் மற்றும் வீடியோக்கள் அடையும் பிரபல்யம், அதனையொட்டிய விளம்பர வருவாய் ஆகியவற்றைப் பொறுத்து, பயனர்களுக்கான பங்கு வருமானத்தையும் எலான் மஸ்க் வழங்க ஆரம்பித்தார். இதனையடுத்து, சகல சமூக ஊடகங்களிலும் பிரபலமாக இருந்தவர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் படைப்புகளை பதிவிட ஆரம்பித்தனர்.
அந்த வகையில் யூடியூப் பிரபலமான மிஸ்டர் பீஸ்ட்க்கும், எலான் மஸ்கிடமிருந்து பகிரங்க அழைப்பு சென்றது. பெரும் தயக்கத்துக்குப் பின்னர் தனது முதல் வீடியோ ஒன்றினை எக்ஸ் தளத்தில் இன்று(ஜன.16) காலை மிஸ்டர் பீஸ்ட் பதிந்தார். ஜிம்மி டொனால்ட்சன் என்ற இயற்பெயர் கொண்ட மிஸ்டர் பீஸ்ட் பதிந்த இந்த வீடியோ, அவரது கணிப்புகளை பொய்யாக்கி பெரும் வெற்றி பெற்றது.
வீடியோ வெளியான அரை நாளில் 50 மில்லியன் பார்வைகளை கடந்தது. இதனை எலான் மஸ்க்கும் பகிர்ந்து கொண்டாடி இருக்கிறார். மிஸ்டர் பீஸ்ட் வீடியோ மூலமாக, எக்ஸ் தளத்தில் யூடியூபர்களின் படையெடுப்பு அதிகரிக்கும் என எக்ஸ் பயனர்கள் எதிர்பார்க்கின்றனர். பரிசோதனை முயற்சியாக மிஸ்டர் பீஸ்ட் தனது வீடியோவை வெளியிட்டிருப்பதோடு, எக்ஸ் தளத்தில் அதனால் கிடைக்கும் வருவாய் விவரத்தை அடுத்த வாரம் வெளியிடுவேன் எனவும் தெரிவித்திருக்கிறார். எக்ஸ் பயனர்கள் மற்றும் யூடியூப் படைப்பாளிகள் அதற்காக ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
புகழ் குன்றா பொன்மனச் செம்மல் |எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ஸ்பெஷல்!