ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பிரபல ‘பேடிஎம்’ பணப்பரிவர்த்தனை செயலி நிறுவனத்துக்கு, ரூ5.39 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மட்டுமன்றி பணப்பரிவர்த்தனைக்கான செயலிகளின் செயல்பாடுகளையும் ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ரிசர்வ் வங்கி வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் மீறப்படும்போது, எச்சரிக்கை மற்றும் அபராத நடவடிக்கைகள் அவை மீது பாய்கின்றன.
இந்தியாவில் பணப்பரிவர்த்தனைக்கான பிரபல செயலியாக பேடிஎம் விளங்குகிறது. சிறு, குறு வணிக நிறுவனங்களில் யுபிஐ பரிவர்த்தனைக்காக நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பேடிஎம் வியாப்பித்துள்ளது. ஆனால் இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளருக்கான ‘உங்கள் வாடிக்கையாளரை அறிந்துக்கொள்ளுங்கள்’ எனும் கேஒய்சி நடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. இது பேடிஎம்-க்கு எதிரான ரிசர்வ் வங்கியின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
மேலும், பணப்பரிவர்த்தனை செயலிக்கான சைபர் பாதுகாப்பு வளையத்தை முறையாக கட்டமைக்காதது, மொபைல் பேங்கிங் மற்றும் யுபிஐ பரிவர்த்தனையில் ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிமுறைகளை பேடிஎம் முறையாக பின்பற்றவில்லை.
இவை தொடர்பான விதிமீறல்கள், ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் வெளிப்பட்டன. இது குறித்து விளக்கம் கேட்டு பேடிஎம்-க்கு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பேடிஎம் நிறுவனம் அளித்த பதிலில் திருப்தி இல்லாததால், அபராதமாக ரூ.5.39 கோடி விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கான சேவை உட்பட பேடிஎம்-இன் வழக்கமான செயல்பாடுகள் எதுவும் பாதிப்படையாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...