இந்தியாவின் செலவாணியான ரூபாயை, தங்கள் தேசங்களில் பயன்படுத்திக்கொள்ள இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
இந்திய கரன்சியை தங்கள் நாடுகளில் பயன்படுத்திக்கொள்ள இதுவரை 35 உலக நாடுகள் முன்வந்திருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் ரூபாயின் மதிப்பு திடமாக உள்ளது. உலகளவில் வலிமையான அமெரிக்காவின் டாலருக்கு நிகராக, இந்தியாவின் ரூபாயும் சர்வதேச நாடுகளின் மதிப்பில் வரவேற்பு பெற்று வருகிறது” என்று பெருமை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது, “நமது ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்த இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம் அந்த நாடுகளுக்கு பயணிக்கும் போது, அந்த நாட்டு செலவாணிக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் பயனடைய முடியும். இந்திய ரூபாயின் திடமான இருப்பு, இந்திய பொருளாரத்தின் வளர்ச்சியிலும் பிரதிபலித்து வருகிறது” என்றார்.
ஜெர்மனி, கயானா, இஸ்ரேல், கென்யா, பிஜி, மலேசியா, மொரிஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா மற்றும் இங்கிலாந்து உட்பட 35 நாடுகள் இந்திய கரன்சியை இதுவரை அங்கீகரித்துள்ளன.
முன்னதாக ‘இந்திய ரூபாயின் 100 ஆண்டு கால பயணம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பேசிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அண்ணல் அம்பேத்கரின் பங்கு குறித்தும் நினைவு கூர்ந்தார். ”அம்பேத்கர் அவர்களை சட்ட மேதையாக மட்டுமே நாம் அறிவோம். உண்மையில் அவர் பொருளாதாரம் உட்பட பல்வேறு துறையிலும் அனுபவம் மிக்கவராக விளங்கினார்.
ஆங்கிலேயர்கள் இந்திய ரூபாயின் மதிப்பை குறைக்க முற்பட்டபோது, அதனை எதிர்கொள்வதில் அம்பேத்கரின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. லண்டன் பொருளாதார கல்வி நிலையத்தில் அம்பேத்கர் தாக்கல் செய்த இந்திய ரூபாய் தொடர்பான ஆய்வறிக்கையின் அடிப்படையிலேயே, இந்திய ரிசர்வ் வங்கி 1935-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது” என்று அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேசினார்.