அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு பொதுவாகவே அதிகம் இருந்து வருகிறது. இந்த நிலையில் உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாக உடல் உறுப்பு தானம் செய்பவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு வருகிறது.
அது மட்டும் இல்லாமல் உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் இணைந்து இறுதி மரியாதை செலுத்துவது சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் விளைவாக கடந்த சில தினங்களாக உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அனைவரும் உடலுறுப்புகளை தானம் செய்ய முன் வரவேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக் கொண்டுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் மட்டும் 6,205 பேர் சிறுநீரகத்துக்காக பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள். அதேபோல 443 பேர் கல்லீரலுக்காக, 75 பேர் இதயத்துக்காக, 62 பேர் நுரையீரலுக்காக, காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 128 பேரின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, அதன் மூலம் மொத்தம் 733 பேர் பயனடைந்துள்ளனர். எனவே அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
இதையும் வாசிக்கலாமே...
பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!
பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை