அத்துமீறும் அம்மா - மகன் வீடியோக்கள்... யூடியூப்-க்கு எதிராக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு


தாய் - மகன் யூடியூப் டிரெண்டிங்

யூடியூபில் அத்துமீறும் அம்மா - மகன் வீடியோக்கள் தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, யூடியூப் இந்தியா நிர்வாகிக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அண்மைக்காலமாக யூடியூபில் அதிகரித்து வரும் தாய் - மகன் உறவை கொச்சைப்படுத்தும் வீடியோக்கள் டிரெண்டிங் ஆவது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடும் கவலை எழுப்பியுள்ளது.

டிரெண்டிங் என்ற பெயரில், அவ்வப்போது விநோதமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாவதுண்டு. அவற்றில் பல அநாகரீகமாகவும், அபத்தமாகவும் கூட அமைவதுண்டு. ஆனபோதும் அவற்றை அமைதியாக கடந்து சென்ற நெட்டிசன்கள், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் விசித்திர டிரெண்டிங் குறித்து பொங்கித் தீர்த்து வருகிறார்கள்.

யூடியூப்

அம்மா - மகன் பாசத்தை காட்டும் பதிவு என்ற பெயரில் இளம் அம்மாக்கள் தங்களது வளர்ந்த மகன்களுடன் அடிக்கும் லூட்டி காண்பவரை நெளிய வைக்கின்றன. பதின்பருவத்தில் பூனை மீசையுடன் தென்படும் மகன், தனது இளம் தாயுடன் கெட்ட ஆட்டம் போடுகிறார். வளர்ந்த மகனுக்கு தாய் உதட்டு முத்தம் வைக்கிறார். சினிமா ஹீரோ ஹீரோயினை கையாள்வது போன்று தாயை அலாக்காக தூக்கி சிறுவன் விளையாடுகிறான், பாலிவுட் பாடல்கள் பின்னணியில் ஒலிக்க திரையில் காணும் அனைத்தையும் தாயும் மகனும் நடத்திக் காட்டுகிறார்கள்.

இந்த வீடியோக்கள் அனைத்தும் முதலில் இன்ஸ்டாகிராம் போன்ற வீடியோ சார்ந்த சமூக வலைதளங்களில் மட்டுமே டிரெண்டிங்கில் இருந்தது. பின்னர் அதன் சகோதர சமூக ஊடகமான ஃபேஸ்புக் ரீல்ஸில் இடம்பெற்றது. அதுவே ஷார்ட்ஸ் என்ற பெயரில் யூடியூபிலும் அதன் பிறகு ஆக்கிரமித்தது. யூடியூப் வீடியோக்கள் பார்வை அடிப்படையில் வருமானம் வழங்கக்கூடியவை என்பதால், இந்த வீடியோக்கள் தீயாய் பரவி டிரெண்டிங்கில் உச்சம் பெற்றது.

அநாகரீக ஷார்ட்ஸ்

வளர்ந்த மகனை பொதுவெளியில் கொஞ்சுவதன் மூலம், இளம் அம்மாக்கள் தங்களது இளமையை பறைசாற்ற இந்த வீடியோக்களை வாய்ப்பாக்கினார்கள். ஆனால் பார்வையாளர் மத்தியில் குறிப்பாக, முதிர்ச்சி அடையாத பதின்பருவத்தினர் மத்தியில் இந்த அநாகரீக வீடியோக்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தின. இது குறித்தான புகார்களின் அடிப்படையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று ஆக்‌ஷனில் இறங்கியது.

தாய் மற்றும் மகன் சம்பந்தப்பட்ட அநாகரீகமான செயல்களை சித்தரிக்கும் சவால் சேனல்கள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ கவலை தெரிவித்தார். யூடியூப்பின் இந்திய அரசாங்க விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கையின் தலைவரான மீரா சாட், ஜனவரி 15 அன்று ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். யூடியூப் நிர்வாகியுடனான விசாரணையை அநாகரீக வீடியோக்களின் போக்கு ஒரு முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


பரபரப்பு... எழும்பூரில் திடீரென தடம் புரண்ட ரயில் எஞ்சின்!

x