2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும்... ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு!


2000 ரூபாய் நோட்டு

ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களில் அல்லது அஞ்சல் அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தபோது 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, கடந்த மே 19-ம் தேதி, புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

அதன்படி மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்யவும், அதனை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளவும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கி

இந்நிலையில் மும்பையில் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: “ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட மே 19-ம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் இருந்த ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளில் ரூ.3.42 லட்சம் கோடி நோட்டுகள் கடந்த செப்டம்பா் 29-ம் தேதி வரை திரும்பப் பெற்றப்பட்டன. நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி, தற்போதுவரை திரும்பப் பெறப்பட்ட ரூ.3.43 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளில் 87 சதவீதம் வங்கிக் கணக்குகளில் வைப்பு வைக்கப்பட்டது.

மற்றவை வங்கிகளில் பணமாக மாற்றிக் கொள்ளப்பட்டது. ரூ.12,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. அவகாசம் முடிவடைந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 8) முதல் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ரூ.2000 நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ளலாம். ரிசர்வ் வங்கிக்கு செல்ல இயலாதவர்கள், அஞ்சல் துறையின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் லீகல் டெண்டராகவே நீடிக்கும்” இவ்வாறு தெரிவித்தார்.

2000 ரூபாய் நோட்டு

முன்னதாக, செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை 14 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் திரும்ப வராமல் இருந்த நிலையில், ஒரே வாரத்தில் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்ப வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x