மும்பையில் ப்ளிப்கார்ட் வேன் ஒன்று சாலை நெடுக 2000 ரூபாய் கரன்சிகளை கொட்டிச் சென்ற சம்பவம் பரபரக்கச் செய்தது.
மும்பையின் கேட்வே பகுதியில் நேற்று வேன் ஒன்றிலிருந்து 2000 ரூபாய் கரன்சி நோட்டுகள் சிதறிய சம்பவம் சமூக ஊடகவெளியில் பரபரப்பை உருவாக்கிறது.
ஷாகித் கபூர், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வெப்தொடர் ஃபார்ஸி. போலீஸிடமிருந்து தப்பிக்க மக்கள் திரள் நெடுஞ்சாலையில் கரன்சி நோட்டுகளை பறக்க விடும் காட்சி இந்த வெப்தொடரில் பிரபலம். இதனை பார்த்துவிட்டு, இன்ஸ்டா பிரபலங்கள் சிலர் விளம்பர மோகத்தில் நெடுஞ்சாலையில் கரன்சி கற்றைகளை நெடுஞ்சாலையில் பறக்க விட்டு போலீஸ் பிடியில் சிக்கினார்கள்.
இந்த வரிசையில் பிரபல ப்ளிப்கார்ட் நிறுவனமும் சேர்ந்திருக்கிறது. ப்ளிப்கார்டின் ’பிக் பில்லியன் டே’ விற்பனை அக்.8 அன்று தொடங்க உள்ளது. இதே நாளில் அமேசானின் ’கிரேட் இந்தியன் பெஸ்டிவல்’ விற்பனையும் தொடங்குகிறது. இதற்கான விளம்பரங்களில் இரு நிறுவனங்கள் மத்தியிலும் பெரும் போட்டி மூண்டது.
இந்த சூழலில் மும்பை கேட்வே சாலையில் வாவ் என்ற விளம்பர வாசகம் தாங்கிய ப்ளிப்கார்ட் வேன் ஒன்றிலிருந்து 2000 ரூபாய் கரன்சிகள் சிதறிப் பறக்கும் வீடியோவை இணையத்தில் பரவச் செய்து அனைவர் கவனத்தையும் கவர்ந்தது ப்ளிப்கார்ட். மும்பை சம்பவம் குறித்து ஃப்ளிப்கார்ட் அதிகாரபூர்வமாக ஒப்புதல் வாக்குமூலம் அறிவிக்காதபோதும், இணையவாசிகள் அதன் விளம்பர பின்னணியை மோப்பமிட்டுள்ளனர்.
ஃபார்ஸி தொடரில் பிரபலமான இந்த காட்சியை சமூக ஊடகங்களில் வைரலானதில் ப்ளிப்கார்டின் நோக்கமும் ஈடேறி இருக்கிறது. விளம்பரத்தில் முந்திய ஃப்ளிகார்ட் நிறுவனம், விற்பனையிலும் அமேசானை முந்துமா?
இதையும் வாசிக்கலாமே...