மத்திய அரசு எச்சரிக்கை... நமது தனிப்பட்ட தகவல்களை குறிவைத்து திருடும் புதிய மால்வேர் ‘லூவாட்ரீம்’!


ஹேக்கர்

இணையத்தில் நமது தனிப்பட்ட தகவல்களை குறிவைத்து திருடும் லூவாட்ரீம் மால்வேர் குறித்து, ‘இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இணையத்தில் தகவல் திருட்டு என்பது வெகு சாதாரணமானது. ஹேக்கர்களின் திருவிளையாடல் அவர்கள் சார்பிலான வைரஸ்கள் ஆகியவை மட்டுமன்றி, நாம் வெகுவாய் நம்பியிருக்கும் இணைய உலாவிகள் முதல் சமூக ஊடகங்கள் வரை இந்த தகவல் திருட்டில் பரவலாய் ஈடுபடுகின்றன.

ஹேக்கர்

நமது தனிப்பட்ட தகவல்களைத் திருடி விளம்பரதாரர்களுக்கு விற்பதிலும், அதற்காக நமது தேடல்கள் மற்றும் விருப்பங்களை உளவு பார்ப்பதிலும் அவை ஈடுபடுகின்றன. இலவசமாக கிடைக்கும் சமூக ஊடக பயன்பாடுகளும், அதற்கு மறைமுக விலையாக நமது தகவல்களை களவாடுகின்றன.

இந்த மறைமுக தகவல் சுரண்டலுக்கு அப்பால் நேரடியாக நமது தனிப்பட்ட தகவல்களை களவாடும் நோக்கிலான மால்வேர்களின் அச்சுறுத்தலும் இணையத்தில் அதிகம் நிலவுகிறது. நிதர்சனத்தில் இவையே ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. அவ்வாறான ’லூவாட்ரீம்’ என்ற மால்வேர் குறித்து மத்திய அரசின் ’இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்’ முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த லூவாட்ரீம் மால்வேர் நமது ஓஎஸ் இயங்குதளத்தின் தகவல்கள் முதல் ஐபி முகவரி வரை அனைத்தையும் களவாடும். குறிப்பாக அலுவலக நெட்வொர்க் அட்மினாக இருப்பின் அவரது தகவல்களை குறிவைத்து திருடும். இவ்வாறு களவாடிய தகவல்களைக் கொண்டு, ஆபத்தை விளைவிக்கும் இதர வைரஸ்களை வரவேற்கும் வகையில் பின்வாசலை திறந்து வைக்கும். இதற்காக ஹேக்கர்களின் கைங்கரியமாகவும் இந்த லூவாட்ரீம் மால்வேர்கள் இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன.

ஹேக்கர்

மத்திய கிழக்கு, மேற்கு ஐரோப்பா மற்றும் தெற்காசியாவில் அதிகளவில் அச்சுறுத்தலை விளைவித்துவரும் இந்த மால்வேர் ஊடுருவல் காரணமாக, இணையத்தில் புழங்குவோர் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது. தரவுகளைத் திருடுவதில் தேர்ச்சி பெற்ற மால்வேர் என்பதால், தனிப்பட்ட நபர்கள் முதல் நிறுவனங்கள் வரை தங்களது இணைய பாதுகாப்பினை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து இறுக கட்டமைத்துக்கொள்வது அவசியமாகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த லூவாட்ரீம் மால்வேர் தாக்குதலால் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளன.

அநாவசிய இணையதள பக்கங்களில் மேய்வது, அங்குள்ள கவர்ச்சிகரமான இணைப்புகள் மற்றும் மெயிலுக்கு வரும் போலியான இணைப்புகள் ஆகியவற்றை ஆர்வக்கோளாரில் சொடுக்குவது போன்றவை ஆபத்தை விளைவிக்கக்கூடும். பொதுஇடத்தில் கிடைக்கும் வைஃபை இணைப்பை பயன்படுத்துவதில் அஜாக்கிரதையும், மால்வேர்கள் ஊடுருவலுக்கு வழிவகுக்கும். தரமான ஆன்டிவைரஸ் மென்பொருள் பாதுகாப்பை நிறுவுவதுடன் அவ்வப்போது அதனை அப்டேட் செய்து வைத்திருப்பதும் மால்வேர்கள் மற்றும் இதர இணைய அபாயங்களில் இருந்து நம்மை காக்கும்.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

x