சிவகாசியில் 2024-ம் ஆண்டுக்கான காலண்டர் விற்பனை ரூ.350 கோடியைத் தாண்டியுள்ளதால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகாசியில் சிறிய மற்றும் பெரிய அளவில் 300-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு காலண்டர், டைரி, நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த காலண்டரில் 90 சதவீதம் சிவகாசியில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.
2024-ம் ஆண்டுக்கான புதிய காலண்டர் ஆல்பம் கடந்த ஆடிப்பெருக்கு தினத்தில் வெளியிடப்பட்டது. மின் கட்டண உயர்வு, கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு காலண்டர் விலை 5 சதவீதம் உயர்ந்தது. இருந்தும் தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டுக்கு எண்ணிக்கை குறையாத அளவிற்கு ஆர்டர்கள் தந்தனர்.
தமிழ், ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல வண்ண காலண்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஜவுளிக்கடைகள், மளிகைக் கடைகள், நகைக் கடைகள், வியாபாரிகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் காலண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டு விட்டன. அரசியல் கட்சியினரின் காலண்டர்கள் மட்டும் தற்போது முழுவீச்சில் தயார் செய்யப்பட்டு வருகிறது.
2023-ம் ஆண்டுக்கான காலண்டர் விற்பனை ரூ.400 கோடி வரை நடைபெற்ற நிலையில், தற்போதுவரை ரூ.350 கோடிக்கு மேல் காலண்டர் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அரசியல் கட்சியினர் கொடுத்துள்ள ஆர்டர்கள் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கிறது என்பதால் இந்த ஆண்டு மொத்த விற்பனை 450 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் மழை காரணமாக காலண்டர்களை உரிய நேரத்தில் தயார் செய்து அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும் மழை வெள்ளம் முடிந்த பிறகு சுறுசுறுப்பாக வேலைகள் நடந்து தொழில் நிறுவனங்களுக்கான காலண்டர்கள் அனைத்தும் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினரின் காலண்டர்கள் உற்பத்தி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அவை இன்னும் ஒரு சில நாட்களில் டெலிவரி கொடுக்கப்படும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.