1 டிரில்லியன் டாலர் இலக்கு வைத்து செயல்படும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்த மாநாட்டின் மூலம் தமிழகம் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்று பேசினார்.
அவரைத்தொடர்ந்து, மாநாட்டில் பேசிய மத்திய மத்திய ஜவுளி, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், கலாச்சாரம், வரலாற்றில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நீங்கள் வந்திருக்கிறீர்கள்.
காஞ்சி பட்டுப்போல பல வண்ணங்களில் குவிந்திருக்கும் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி. ஒவ்வொரு மாநிலமும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். மாநிலங்கள் முன்னேறாமல் நாடு முன்னேறாது என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கு வைத்து செயல்படும் முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டுகிறேன்.
சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய 'ஆதித்யா எல்-1' திட்டத்தின் இயக்குநர் நிகர் ஷாஜி, தமிழ்நாட்டின் தென்காசி என்ற சிறிய நகரில் இருந்து வந்தவர். அவருக்கு எழுந்து நின்று பாராட்டைத் தெரிவிப்போம். நாட்டில் உள்ள பணி செய்யும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகின்றனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து, நாட்டின் பொருளாதார உயர்வில் பெண்கள் பங்களிப்பு உயர வேண்டும் என விரும்புகிறேன்.
தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடியின் இதயத்தில் தனி இடம் உள்ளது. தமிழக கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியுள்ளார் மோடி. காலனி ஆதிக்க மனநிலை மாற வேண்டும். பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
2047ல் வளர்ந்த நாடாக இந்தியா மாற பிரதமர் 5 திட்டங்களை முன்வைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த கடும் சவால்களை எதிர்கொண்டோம். இளைஞர்கள் உள்பட அனைவரும் தொழில் தொடங்குவதற்காக விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன" என பியூஷ் கோயல் பேசினார்.