உயிரைக் காத்த அரசு மருத்துவமனையில் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழா...நெகிழ வைத்த தாய்!


அரசு மருத்துவமனையில் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாடும் ஆயிஷா ஷபானா

சிக்கலான பிரசவத்தில் தனது உயிரைக் காப்பாற்றி குழந்தை பிறக்க உதவிய அரசு மருத்துவமனையை மறவாமல் தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை அங்குவைத்து பெண் கொண்டாடியிருக்கிறார்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஆயிஷா ஷபானா திருமணத்துக்குப் பிறகு சென்னையில் கணவருடன் வசித்து வந்தார். கடந்த வருடம் நிறைமாத கர்ப்பிணியான அவர் பிரசவத்துக்காக தனது தாய் வீடான பட்டுக்கோட்டைக்கு வந்திருந்தார்.

அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டவுடன் ஆபத்தான நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் கொண்டு சென்று அனுமதித்தனர்

அங்கு அவருக்கு உடல்நிலை மோசமடைந்து வலிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்து தாயையும், சேயையும் காப்பாற்றியுள்ளனர். பின்னர் தனது கணவருடன் ஆயிஷா ஷபானா சென்னை சென்று விட்டார்.

பிறந்த நாள் கொண்டாட்டம்

தற்போது குழந்தை பிறந்து ஒரு வருடமான நிலையில் தனது குழந்தையின் பிறந்தநாளை, தனது குழந்தையையும், தன்னையும் காப்பாற்றிய பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொண்டாட வேண்டும் என விரும்பியுள்ளார் ஷபானா.

இதற்காக சென்னையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு வந்து, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருடன் கேக் வெட்டி குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடினார். இது அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x