திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பு வணிக வளாகம் கட்ட உயர் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது. இதனால், கட்டுமான பணிக்காக தோண்டிய பள்ளத்தை கடந்த 10 மாதங்களாக மூடாமல் உள்ளதால் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி, ராஜகோபுரத்தின் அஸ்திவாரத்துக்கு ஆபத்து ஏற்படும் என பக்தர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், உலக பிரசித்தி பெற்றதாகும். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இக்கோயிலின் கிழக்கு வாசலில் 217 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ராஜகோபுரம் உள்ளது. கோபுரம் தரிசனம் என்பது இந்து மத வழிபாட்டில், பக்தர்களின் நம்பிக்கைக்குரியதாகும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாகம் கட்ட இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக, கடந்த 2023-ல் ரூ.6.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 6,500 சதுரடியில் அடுக்குமாடியில் 151 கடைகள் கட்ட முடிவானது.
ராஜகோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டுவதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களது எதிர்ப்பையும் மீறி, கடந்தாண்டு அக்டோபர் 20-ம் தேதி கால்கோல் விழா நடைபெற்றது. வணிக வளாக கட்டுமான பணியை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். ஓராண்டுக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டது.
இதற்கிடையில், அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டுவதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. வணிக வளாகம் கட்டினால், கோபுரத்தை பக்தர்களால் முழுமையாக தரிசிக்க முடியாது. மேலும், ராஜகோபுரத்துக்கும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் வணிக வளாக கட்டிட பணிக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.
புராதன சின்னங்களை பாதுகாக்கும் உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வில், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோபுரத்துக்கும் மற்றும் கோபுர தரிசனத்துக்கும் பாதிப்பு இருக்காது என இந்து சமய அறநிலையத் துறை தரப்பின் வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.
மேலும் அவர்கள், ராஜகோபுரத்தை மறைத்து கட்டப்படும் வணிக வளாகத்துக்கு தடை விதித்து கடந்தாண்டு நவம்பரில் உத்தரவிட்டனர். உத்தரவு பிறப்பித்த நிமிடத்தில் இருந்து தடை அமலுக்கு வருவதாகவும், கட்டுமான பணியை மேற்கொள்ளக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
உயர் நீதிமன்றம் உத்தரவு எதிரொலியாக வணிக வளாக கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டன. வணிகவளாக கட்டுமான பணிக்காக சுமார் 100 நீளம், 10 அடி அகலம் மற்றும் 6 அடி முதல் 8 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டன. கட்டுமான பணிக்கு கம்பிகளும் குவிக்கப்பட்டன. கட்டுமான பணிக்கு தடை விதிக்கப்பட்டதால், தோண்டப்பட்ட பள்ளம், கடந்த 10 மாதங்களாக மூடப்படாமல் உள்ளன.
மழைக்காலங்களில், பள்ளத்தில் மழைநீர் தேங்குவதால், கோயில் ராஜகோபுரத்தின் அஸ்திவாரத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என பக்தர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 217 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தின் அஸ்திவாரம், அகலமாக இருக்கும் என கூறும் பக்தர்கள், பே கோபுரம் முன்பு கான்கிரீட் தளம் அமைக்க பள்ளம் தோண்டியதற்கு, அதன் அஸ்திவாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு கிளம்பியதால், பள்ளம் தோண்டுவது கைவிடப்பட்டதையும் நினைவு கூர்ந்து சுட்டி காட்டுகின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, “ராஜகோபுரம் முன்பு வணிக வளாகம் கட்ட உயர் நீதிமன்றம் தடை விதித்ததை வரவேற்கிறோம். இதனால், கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால், கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடவில்லை.
இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்குவதால், ராஜகோபுரத்தின் அஸ்திவாரத்துக்கு ஆபத்து ஏற்படும். எனவே, பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அந்த இடத்தில் குவித்துள்ள இரும்பு கம்பிகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை அப்புறப்படுத்தி, காலி இடத்தை பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
விழா காலங்கள் என்ற நிலையில் மாற்றம் ஏற்பட்டு, வார விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், அவர்கள் இளைப்பாறுவதற்கு இந்து சமய அறநிலையத் துறையும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.