புதுக்கோட்டையில் அரசுப் போக்குவரத்துக் கழக 2 அலுவலகங்களை இணைக்கும் முடிவை கைவிட கோரிக்கை


புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகம்.

புதுக்கோட்டை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலைப் பயன்படுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை அலுவலகங்களை இணைப்பது மற்றும் 2 தொழில்பிரிவுகளை இடமாற்றம் செய்வது ஆகிய நடவடிக்கைகளை நிர்வாகம் கைவிட வேண்டும் எனதொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை அலுவலக வளாகத்தில் புறநகர் மற்றும் நகர் பிரிவு அலுவலகங்கள் தனித்தனி நிர்வாகங்கள் மூலம் தனித் தனியே இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த 2 அலுவலகங்களையும் ஒன்றாக இணைக்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இங்கு செயல்பட்டு வந்த டயர் ரீட்ரேடிங் பிரிவு, பழுது நீக்குதல் பிரிவு ஆகியவை திருச்சிக்கும், ஓட்டுநர் பயிற்சிப் பிரிவு காரைக்குடிக்கும் மாற்றும் பணியும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள், இந்த நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து சிஐடியு தொழிற்சங்க மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் கூறியது: நகர் பேருந்து மற்றும் புறநகர் பேருந்து பிரிவுகள் தனித் தனியே நிர்வகிக்கப்பட்டால்தான், அனைத்து பகுதிகளுக்கு பேருந்து சேவையை தடையின்றி செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, கிராமப் புறங்களில் பெண்களுக்கு பேருந்துகளில் அரசின் இலவச பயணத்துக்கு உத்தரவாதம் அளிக்க முடியும். எனவே, 2 அலுவலகங்களையும் இணைக்கும் முடிவை நிர்வாகம் கைவிட வேண்டும்.

மேலும், டயர் ரீட்ரேடிங் பிரிவு, பழுது நீக்கும் பிரிவு ஆகியவற்றை திருச்சிக்கும், ஓட்டுநர் பயிற்சி மையத்தை காரைக்குடிக்கும் இடம் மாற்றக் கூடாது என நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் முயற்சிக்கிறது. இது, தொழிலாளர்களுக்கு எதிரான செயல். இதுமட்டுமின்றி, தொழிலாளர்களுக்கு கூடுதல் நேரம் பணி வழங்கப்படுவதுடன், மாற்றுப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுகின்றனர்.

இது தொடர்பாக தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தலையிட முடியாது என கூறுகின்றனர். தொழிலாளர்களுக்கு எதிரான இணைப்பு, இடமாற்ற நடவடிக்கைகளை நிர்வாகம் கைவிடவில்லையெனில், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டல நிர்வாக இயக்குநர் மகேந்திர குமார் கூறியது: புதுக்கோட்டையில் நகர் மற்றும் புறநகர் அலுவலகங்களை ஒன்றாக இணைப்பதாலோ, சில பிரிவுகளை இடமாற்றம் செய்வதாலோ போக்குவரத்து சேவையில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது. அனைத்து பேருந்துகளும் உரிய நேரத்துக்கு இயக்கப்பட வேண்டும் என்பதால்தான் நிர்வாக நலன் கருதி இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.