சமூக ஊடக வானவில்-74: யாதும் ஊரே, யாவரும் ‘யூபோ'!


ஃபேஸ்புக்கிலோ, இன்ஸ்டாவிலோ இன்னும் பிற சமூக ஊடகச் செயலிகளிலோ விருப்பங்களையும், தங்களுக்கான செல்வாக்கையும் கணக்கிட்டு கவலைப்பட்டுக்கொண்டிருப்பவர்கள், யூபோ (Yubo) செயலியை அறிமுகம் செய்துகொள்வது ஆசுவாசம் அளிக்கும். புத்துணர்ச்சியும் தரும். ஆனால், இந்தச் செயலியையும், இதன் தன்மையையும் புரிந்துகொள்வதற்குப் புதுயுக மனோபாவம் தேவை.

பிரான்ஸைச் சேர்ந்த சச்சா லஸிமி (Sacha Lazimi) என்பவர் நண்பர்களோடு சேர்ந்து இந்த செயலியை உருவாக்கினார். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னேப்சேட் எல்லாம் போலியானவை என்று கூறும் லஸிமி, இந்த வகை செயலிகளின் முடிவில்லா ஸ்க்ரோலிங் தன்மைக்கு மாறாக அர்த்தம் உள்ள நட்பு வளர்க்க உதவும் நோக்கில் யூபோ செயலியை உருவாக்கியதாகவும் கூறியிருக்கிறார். தொடர்புகளை விரும்பும் புதுயுக இளைஞர்களுக்கான செயலி இது என்கிறார்.

மக்கள் புரட்சி வெடித்த பிரான்ஸில் இருந்து உருவாகியிருக்கும் இந்தச் செயலி, சமூக ஊடக உலகில் நிகழும் அடுத்தகட்டப் பாய்ச்சலின் அடையாளமாகவும் அமைகிறது. சமூக வலைப்பின்னல் சேவை என்பது நட்பு வளர்ப்பதற்கானதே தவிர, பின் தொடர்பாளர்களைச் சேகரிப்பதற்கானதோ அல்லது விருப்பங்களை எண்ணி பெருமை கொள்வதற்கானதோ அல்ல எனும் கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு யூபோ செயல்படுகிறது. இதன் காரணமாகவே யூபோ செயலி இக்கால இளசுகளின் மனங்கவர்ந்த செயலியாகவும் கருதப்படுகிறது.

இன்ஸ்டா உள்ளிட்ட செயலிகளில், மற்றவர்கள் பாராட்டும் அழகிய பிம்பத்தை உருவாக்கிக்கொள்வதற்காகப் பயனாளிகள் மெனக்கெடும் சூழலில், இளம் பயனாளிகள் தங்களைத் தாங்களாகவே வெளிப்படுத்திக்கொண்டு, புதிய நட்பு வளர்த்துக்கொள்ள வழி செய்யும் சேவையாக யூபோ கவர்கிறது.

இயல்பாக வெளிப்படுத்திக்கொள்வதும், புதிய நட்பைத் தேடிக்கொள்வதும் யூபோ செயலியின் ஆதார அம்சங்கள். ‘ஸ்ட்ரீமிங்’ முறையில் பயனாளிகள் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதன் மூலம் யூபோ இதைச் சாத்தியமாக்குகிறது.

அடிப்படையில் யூபோ செயலி ஒரு நேரடி ஸ்ட்ரீமிங் சேவை. இதன் வாயிலாகப் பயனர்கள் தங்களை உலகுக்கு ஒளிபரப்பிக்கொள்ளலாம். ஆனால், இப்படி ஒளிபரப்பு செய்வதன் நோக்கம், பார்வைகளையோ, பின்தொடர்பாளர்களையோ குறிவைப்பது அல்ல. நண்பர்களைக் கண்டறிவதும், நட்பு வளர்ப்பதும்தான் இதன் நோக்கம். எனவே இந்தத் தளத்தின் உறுப்பினர்களுக்கு எந்த எதிர்பார்ப்பு நெருக்கடியும் இல்லை. அழகாகத் தோன்றுகிறோமா, பார்வையாளர்கள் விரும்புவார்களா என்ற கவலை எல்லாம் கிடையாது. உறுப்பினர்கள் அவர்கள் விரும்பிய வண்ணம் இருக்கலாம்.

யூபோ செயலியில் உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள, பயனர்கள் தங்கள் சுய படத்தையும் பதிவேற்ற வேண்டும். வயது தொடர்பான உறுதிக்காக இந்த நிபந்தனை. அதன் பிறகு உறுப்பினர்கள் தங்களுக்கான பக்கத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பில் ஈடுபடலாம். இந்த ஒளிபரப்பை எல்லா உறுப்பினர்களும் பார்வையிடலாம். தொடர்பான உரையாடலிலும் பங்கேற்று, கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

அதே நேரத்தில், சக உறுப்பினர்களையும் இந்தச் செயலி பரிந்துரைக்கும். இப்படி பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்களை, இடதுபுறம் அல்லது வலதுபுறமாகத் தள்ளி, விருப்பம் அல்லது விருப்பமின்மையைத் தெரிவிக்கலாம். டேட்டிங் செயலியான டிண்டர் பிரபலமாக்கிய இந்த உத்தியை யூபோவும் பயன்படுத்துகிறது.

சக உறுப்பினரைப் பிடித்திருப்பதாகத் தெரிவித்தால், அவர்களோடு தொடர்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது. அவர்களை நட்பாக்கிக்கொண்டு தொடர்ந்து உரையாடலாம். இப்படி உலகம் முழுவதும் உள்ள உறுப்பினர்களைப் புதிய நண்பர்களாக்கிக்கொண்டு ஆர்வம் உள்ள விஷயங்களில் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

ஆக, யூபோ செயலியில் யாவரும் கேளிர்தான்.

லட்சம் பின்தொடர்பாளர்கள், ஆயிரம் விருப்பங்கள் என்ற கணக்கெல்லாம் தேவையில்லாமல், இயல்பாக நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். கருத்துப் பரிமாற்றம் மூலம் உறவு வளர்த்துக்கொள்ளலாம்.

இப்படி இயல்பாக வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பிற்காகவே புதுயுகத் தலைமுறையினர் இந்தச் செயலியை விரும்பிப் பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல இந்தச் செயலி வாயிலாக, நேரடி ஒளிபரப்பு செய்யலாம். இதற்கு கதை, திரைக்கதை எல்லாம் தேவையில்லை. நடமாடுவது, கதை சொல்வது, வீட்டுத் தோட்டத்தைக் காண்பிப்பது என எதை வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளலாம். சக உறுப்பினர்கள் இவ்வாறு பகிரும் காட்சிகளைப் பார்த்து ரசிக்கலாம். மற்றவர்கள் வாழ்க்கை முறையை இதன் மூலம் பரிச்சயம் செய்துகொள்ளலாம்.

ஆர்வம் இருந்தால், உறுப்பினர்களோடு குறிப்பிட்ட தலைப்புகளில் விவாதத்தில் ஈடுபடலாம். இதில் விளையாடுவதற்கான விளையாட்டுகளும் உண்டு.

உறுப்பினர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் வசிக்கும் நகரங்களையும் இங்கிருந்தே சுற்றிப்பார்க்கலாம் . அரட்டை அறைகள் போல ஒளிபரப்பு அறைகளையும் உண்டாக்கிக்கொள்ளலாம்.

இந்தச் செயலி தொடர்பாகப் பல சர்ச்சைகள் எழுந்தாலும், உலக அளவில் புதிய நண்பர்களைத் தொடர்புகொண்டு, கருத்துப் பரிமாற்றம் மூலம் புரிதலை வளர்க்க வழிகாட்டுவதாகப் பாராட்டப்படுகிறது. விளம்பர உத்தி, மார்க்கெட்டிங் ஜாலங்கள் எல்லாம் இல்லாமல் இயல்பான சமூகக் கூடமாக இந்தச் செயலி அமைந்திருக்கிறது.

2015-ல் அறிமுகம் ஆன இந்தச் செயலி கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் தனது இயல்பான தன்மையால் பயனாளிகளுக்கு ஆறுதலாக அமைந்ததாகவும் பாராட்டு பெற்றது.

இனவெறி, நிறவெறி போன்ற சார்புகள் எல்லாம் இல்லாமல் பரஸ்பரப் புரிதலை வளர்க்கவும் இந்தச் செயலி வழிசெய்வதாகக் கருதப்படுகிறது. இந்தச் செயலி வாயிலாக, நாடுகளின் எல்லைகளைக் கடந்து நண்பர்களானவர்கள் அதிகம். குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்த இணைய சமூகங்களை உருவாக்கிக் கொள்வதையும் சாத்தியமாக்குகிறது.

(தொடரும்)

x