தேன் தொழில்முனைவோரை உருவாக்கும் மதுரை வேளாண் அறிவியல் நிலையம்!


தோட்டங்களில் வைக்கப்பட்டுள்ள தேனீ வளர்ப்பு பெட்டி. (கோப்பு படம்).

மதுரை: உலகில் கோடிக்கணக்கான பூச்சி யினங்கள் வாழ்கின்றன. அதில் தேனீக்கள்தான் மனிதனுக்கு நேரடியாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பூச்சியினம்.

சுறுசுறுப்பான உழைப்புக்கும், கூட்டு முயற்சிக்கும், தேடுதலுக்கும் தேனீக்களை ஒப்பிடுவர். விவசாயம், பல்லுயிர் பெருக்கம், சுற்றுச்சூழல் மற்றும் மனித வாழ்க்கைக்கு என தேனீக்களால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். குறிப்பாக தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அத்தகைய தேனீக்கள் தற்போது வேகமாக அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது. தேனீக்கள் எதிர்கொள்ளும் சவால்களான, வாழ்விட இழப்பு, காலநிலை மாற்றம், பூச்சிக்கொல்லி பயன்பாடு அதிகரிப்பு மற்றும் நோய்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தேனீக்கள் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த தினத்தில் மகரந்தச் சேர்க்கைக்கு உகந்த தோட்டங்களை உருவாக்குதல், பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டை தவிர்த்தல், உள்ளூர் தேனீ வளர்ப்பவர்களை ஆதரிப்பது மற்றும் ஆரோக்கியமான சூழலைப் பராமரித்தல், தேனீக்கள் வகிக்கும் முக்கியப் பணிகள் குறித்து விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் விளக்குவதை வேளாண் விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். அந்த வகையில், தேனீ வளர்ப்பிலும் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்புப் பயிற்சி வழங்குவதிலும் மதுரை ஒத்தக்கடையில் செயல்படும் அரசு வேளாண்மை கல்லூரி, தமிழகத்தின் பிற கல்லூரிகளைவிட அதிக பங்கு வகிக்கிறது.

இது குறித்து மதுரை வேளாண்மைக் கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் சுரேஷ் கூறியதாவது: பூக்கும் தாவரங்களுக்கும், தேனீக்களுக்குமான உறவு முக்கியமானது. ஒன்றால் மற்றொன்று பயன்பெறுகிறது. பூக்கும் தாவரங்கள் இல்லாமல் தேனீக்கள் இல்லை. தேனீக்கள் இல்லாமல் பூக்கும் தாவரங்கள் இல்லை. தேனீக்கள் பூக்களில் அமர்ந்து தேனையும் மகரந்தத்தையும் எடுக்கையில் தேனீக்களால் மலர்களில் அயல் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. இதனால்தான் தாவரங்களில் பிஞ்சும், காய்களும், பழங்களும் உற்பத்தி ஆகின்றன.

இந்த விழிப்புணர்வை விவசாயிளுக்கு ஏற்படுத்தி வருகிறோம். அதற்காக மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் தொடர்ச்சியாக விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோரு க்கு தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி அளிக்கப் படுகிறது. இப்பயிற் சியில் தேனீக் களின் வகைகள், தேனீ வளர்ப்பு மற்றும் தேன் எடுத்தல் பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப் படுகிறது. மாதந்தோறும் 10-ம் தேதி இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. மேலும், 7 நாட்கள் பயிற்சியும் அளிக்கப்ப டுகிறது.

தேனீ வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு பயன் பெற்று வருகின்றனர். பயிற்சியில் கலந்து கொண்டோருக்கு தேன் பெட்டியும், தேன் எடுக்கும் கருவியும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு புதுடெல்லியில் இயங்கி வரும் தேசிய தேனீ வாரியம் நிதி உதவி செய்கிறது. மதுரை மாவட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வழிகாட்டுதலுடன் 100 விவசாயிகள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு பயிர் உற்பத்தியைப் பெருக்குவதோடு தேனையும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் தேனீ வளர்ப்பையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு சாதித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.