புதுச்சத்திரம் பகுதியில் வெட்டி வேர் விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம்


புதுச்சத்திரம் பகுதியில் உள்ள வயலில் வெட்டி வேர் அறுவடை நடைபெறுகிறது. அடுத்தபடம்: அறுவடை செய்யப்பட்ட வெட்டிவேர் கட்டி தயாராக வைக்கப்பட்டுள்ளது.

கடலூர்: புதுச்சத்திரம் பகுதியில் விவசாயிகள் ஆர்வ முடன் வெட்டி வேர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே கொத்தட்டை, பெரியப்பட்டு உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் மணல் பாங்கான நிலங்கலாக இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்த மண்ணில் விவசாயிகள் ஆண்டாண்டு காலமாக சவுக்கு, தைலமரம், கம்பு, சோளம், வெள்ளரி, பாகற்காய் உள் ளிட்ட மானாவாரி பயிர்களை பயிர் செய்து வந்தனர். இந்த பயிர்களை விளைவிப்பதில் விவசா யிகளுக்கு பராமரிப்பு உள்ளிட்ட அதிக செலவு ஆவதால் சிரமம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வெட்டிவேர் விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வெட்டிவேர் அழகு சாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், சுவாமி சிலைகளுக்கு மாலையாக அணிவிக்கவும், அதேபோல் வீட்டின் வாசற்படியில் வாசனைக்காக தொங்க விடுகிறார்கள். வெட்டிவேர் மூலம் சோப்பு உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்கள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

தற்போது புதுச்சத்திரம் பகுதி விவசாயிகள் ஆர்வமுடன் வெட்டி வேர் விவசாயத்தை செய்து வருகின்றனர். சிலர் நிலத்தை குத்தகை எடுத்தும் வெட்டி வேர் விவசாயம் செய்து வரு கின்றனர். வெட்டிவேர் பத்து மாத பயிராகும். இதனை விவசாயிகள் பராமரித்து தற்போது நல்ல விலைக்கு விற்பதாகவும் கூறுகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதி விவசாயி கொளஞ்சியப்பன் கூறுகையில், “சவுக்கு, தைலம் உள்ளிட்ட மரங்களை இந்த மண்ணில் விவசாயம் செய்தால் 3 ஆண்டு முதல் 4 ஆண்டு காலம் அதனை பராமரித்து அறுவடை செய்வது சிரமமாக இருந்தது. தற்போது இந்த பகுதியில் விவசாயிகள் சிலர் வெட்டிவேர் பயிரிட்டு வருகிறார்கள். தற்போது ஒரு டன் வெட்டிவேர் ரூ.1.50 லட்சம் வரை விற்பனை ஆகிறது. புதுச்சத்திரம், பரங்கிப் பேட்டை, ஆலப்பாக்கம், பெரியப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 2 டன் வரை வெட்டி வேர் கிடைக்கிறது.

இது விவசாயிகளுக்கு லாபத்தை தருகிறது. வெட்டிவேரை நடவு செய்து 3 மாதத்திற்கு களை எடுத்தல் மற்றும் தண்ணி ஊற்றுதல் என்று பராமரிப்பு, உரச் செலவு தான். நன்கு வளர்ந்து விட்டால் அறுவடை செய்யும் போது பொக்லைன் இயந்திரம் மூலம் வேரை பிடுங்கி ஆட்களை கொண்டு வேரை வெட்டி எடுக்கும் கூலி மட்டும் தான். இதை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் வாசனை திரவியம், நறுமண பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பட்டு வருகிறது. அதேபோல் கோயிலுக்கு மாலை கட்டுவதற்கும் மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள்” என்றார்.