‘ஒரு சவரன் ரூ.1 லட்சம் ஆக உயரும்’ என்ற கருத்தால் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம்


கோவையில் உள்ள நகைப் பட்டறையில் தங்க நகைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர். படம்: ஜெ.மனோகரன்.

கோவை: நிதி வல்லுநர்கள் தெரிவிக்கும் கருத்துக்களால் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளதாக நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்று பரவலுக்கு பின் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கும் என நிதி வல்லுநர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதில் மக்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

இது குறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கரோனா தொற்று பரவல், அதைத்தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - பாலஸ்தீன நாடுகள் இடையே நடைபெறும் போர், உலகளாவிய பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. எந்த ஒரு நாட்டில் போர் தொடங்கினாலும், நிதி ஆதாரத்துக்கு அந்நாடு இருப்பு வைத்துள்ள தங்கம் மட்டுமே பெரிதும் உதவும்.

இந்தியாவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.55 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு லட்சம் ரூபாய் வரை உயரும் என நிதித்துறை வல்லுநர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விலை அதிகரித்துவரும் நிலையிலும் தங்கத்தில் முதலீடு செய்வது எதிர்கால நிதி தேவைகளுக்கு பெரிதும் உதவும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

இந்தாண்டு அட்சய திருதியை தினத்தன்று கோவை மாநகரில் மட்டும் 100 கிலோ எடையிலான தங்க நகைகள் வியாபாரம் நடந்துள்ளது. அட்சய திருதியை தினம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் பண்டிகை நாட்கள் மற்றும் இதர நாட்களில் மக்கள் தாங்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தை கொண்டு மோதிரங்கள், தோடு என சிறிய அளவிலான நகைகளை தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.

விலை உயர்வு காரணமாக ஆரம், கல் நெக்லஸ், கல் வளையல் உள்ளிட்ட பெரிய நகைகள் விற்பனை குறைந்துள்ளது. மக்கள் மட்டுமின்றி சீனா, ஜப்பான், இந்தியா, ரஷ்யா நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. உற்பத்தியை விட தேவை அதிகரித்து வருவது தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

விலை குறையும்: தங்கத்துக்கு 3 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 15 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இறக்குமதி வரியை 4 சதவீதமாக மத்திய அரசு குறைத்தால் ஒரு சவரனுக்கு ரூ. 6 ஆயிரம் வரை விலை குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.