செல்போனுக்கு கையடக்க சோலார் சார்ஜர்: திருச்சி என்ஐடி - சி டாக் இணைந்து தயாரிப்பு


செல்போன், கேட்ஜெட்களுக்கான சோலார் சார்ஜர்.

திருச்சி: திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் மேம்பட்டகணினி மேம்பாட்டு மைய (சி-டாக்) மூத்த இயக்குநர் வி.சந்திரசேகர், திருச்சி என்ஐடியில் முனைவர் பட்டம் (பி.எச்டி) பெற்றுள்ளார். இவருக்கு, திருச்சி என்ஐடி பேராசிரியர் நாகமணி வழிகாட்டியாக இருந்தார்.

இவரது தலைமையில் சி-டாக் மூத்த இயக்குநர் வி.சந்திரசேகர் மற்றும் அவரது குழுவினர் இணைந்து, செல்போன் உள்ளிட்ட கேட்ஜெட்களுக்கான கையடக்க சோலார் சார்ஜர், தெரு விளக்கு பயன்பாட்டுக்கான மேம்படுத்தப்பட்ட சோலார் பேனல் ஆகியவற்றை தயாரித்துள்ளனர். மேலும், சூரிய ஒளி மின்னழுத்த மின் கலங்களிலிருந்து இயங்க கூடிய எளிய, சிக்கனமான மின்னணு (கன்வெர்ட்டர் எலெக்ட்ரானிக் போர்டு) இணை உபகரணம் ஒன்றையும் தயாரித்துள்ளனர். இவற்றுக்கு காப்புரிமை பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து பேராசிரியர் நாகமணி கூறியது: கையடக்க சோலார் சார்ஜரை எங்கும் எடுத்துச் செல்லலாம். அதேபோல, தற்போது சோலார் தெரு விளக்குகளுக்கு சோலார் பேனலிலிருந்து வரும் ஆற்றலை சேமிக்க பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி சில நேரங்களில் திருடு போகின்றன. இதைத் தவிர்ப்பதற்காக, மேம்படுத்தப்பட்ட சோலார் பேனலை தயாரித்துள்ளோம். இதன் பின்பகுதியில் சிறிய அளவிலான பேட்டரி இணைந்து இருக்கும். இதனால் பேட்டரி திருட்டு குறையும்.

மற்றொரு இணை தயாரிப்பான கன்வெர்ட்டர் எலெக்ட்ரானிக் போர்டை அதிகளவு பேட்டரிகள் பயன்படுத்தும் இடங்களில் பயன்படுத்தலாம். சார்ட் சர்க்யூட் பிரச்சினை ஏற்படாது. இவற்றுக்கு காப்புரிமை பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை தொழில் ரீதியாக முழு உற்பத்தி செய்யும் பட்சத்தில் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் என்றார். ஆராய்ச்சி குழுவினரை திருச்சி என்ஐடி இயக்குநர் ஜி.அகிலா பாராட்டினார்.