வீட்டுப்பாடச் சுமையிலிருந்து குழந்தைகளை விடுவிப்போம்!


ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது எனத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்கத்தக்கது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்தும் முனைப்பும் அரசிடம் தென்படுகிறது. இதற்காகத் தனியே பறக்கும் படையும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் தனியார் பள்ளிகள் முழுமையாகப் பின்பற்றுகின்றனவா என்பது முக்கியமான கேள்வி.

இளம் வயதில் வீட்டுப்பாடங்களிலேயே மூழ்கியிருந்தால் குழந்தைகளுக்குக் கல்வி மீதான ஆர்வம் குறைந்துவிடும். பாடப் புத்தகங்களைப் படிப்பது, விளையாடுவது என எதற்கும் நேரம் கிடைக்காது. பெற்றோர்களுக்கும் அது பெரும் சுமையாக இருக்கும். குறிப்பாக, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ரொம்பவே சிரமத்துக்குள்ளாகின்றனர். இது உலகளாவிய பிரச்சினை. இடைநிலை வகுப்புகள்வரை வீட்டுப்பாடமே வேண்டாம் என மேற்கத்திய நாடுகளின் பெற்றோர்கள் வலியுறுத்துகிறார்கள்.

‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என்று பாடிய பாரதியார், ‘மாலை முழுதும் விளையாட்டு’ என்றும் அதே பாடலில் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், நிதர்சனம் அப்படி இல்லை. பள்ளி முடிந்து வந்ததும் உடனடியாகத் டியூஷன், பின்னர் மீண்டும் வீடு திரும்பியதும் வீட்டுப்பாடம் என பள்ளி மாணவர்கள் - குறிப்பாக, தனியார் பள்ளி மாணவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. இதனால் இரவில் தூக்கம் பாதிக்கப்படுவதுடன், பிற கலைகளில் ஆர்வம் செலுத்தும் வாய்ப்பையும் குழந்தைகள் இழந்துவிடுகிறார்கள். இதற்கு முடிவுகட்ட வேண்டும்.

அரசு விடுமுறை நாட்களில் வகுப்பு நடத்தும் தனியார் பள்ளிகளும் உண்டு. எனவே, அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளைத் தனியார் பள்ளிகளும் முறையாகப் பின்பற்றுகின்றனவா எனத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். பெருந்தொற்றுக் கால பிரச்சினைகளிலிருந்து மெல்ல மீண்டுவரும் குழந்தைகளுக்கு மேலும் அழுத்தம் தரக் கூடாது. வீட்டுப்பாடங்களுக்காகப் புத்தகப் பை எனும் பெயரில் பெரும் சுமையைத் தூக்கும் அவல நிலையிலிருந்து குழந்தைகளை விடுவிக்க வேண்டும்.

x