தமிழகம் முழுவதும் நிகழாண்டில் இதுவரை 28 யானைகள் உயிரிழப்பு - காரணங்கள் என்னென்ன?


கோவை: தமிழகத்தில் நிகழாண்டில் இதுவரை 28 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் சுமார் 29,000 யானைகள் உள்ளன. தமிழகத்தில் கடந்த 2023-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 2,961 யானைகள் உள்ளன. கோவை மாவட்டத்தில் 196 யானைகள் இருப்பதாக வனத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசிய யானைகளின் முக்கிய வாழ்விடமாக தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. குறிப்பாக கோவை வனக்கோட்டத்தில் முதுமலை, பந்திப்பூர் மலைப் பகுதியில் இருந்துவரும் யானைகள், சமவெளிப் பகுதியான சத்தியமங்கலம், சிறுமுகை, எட்டிமடை வரை வந்து கேரளா செல்கின்றன.

மேலும் யானைகளின் வலசைப் பாதை தடைபடுவதாலும், சுருங்கியதாலும் அவை வனத்தைவிட்டு வெளியேறுவதால் மனித-விலங்கு மோதல்கள் நிகழ்கின்றன. யானைகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

அதேவேளையில், தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 85 முதல் 120 யானைகள் வரை உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வயது முதிர்வால் இயற்கையாக யானைகள் உயிரிழந்து வருகின்றன. மறுபக்கம் மின்சாரம் பாய்ச்சுதல், நாட்டு வெடிகுண்டு, வேட்டையாடுதல், ரயில், வாகனங்கள் மோதி விபத்து போன்ற மனித தலையீடுகளாலும் யானைகள் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன.

அந்தவகையில் தமிழகத்தில் கடந்த 2010 முதல் தற்போது வரை1604 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் 2010-2013 வரையிலான காலகட்டத்தில் 554 யானைகள் உயிரிழந்துள்ளன.

2014-ல் 105-ம், 2015-ல் 70-ம், 2016-ல் 98-ம், 2017-ல் 173-ம், 2018-ல் 79-ம், 2019-ல் 105-ம், 2020-ல் 103-ம், 2021-ல் 102-ம், 2022-ல் 106-ம், 2023-ல் 109 யானைகளும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நிகழாண்டில் 28 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் வனத்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ‘ஓசை’ அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறியதாவது: யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதன் மரணங்களும் அதிகரிக்கும். இதில் மனிதர்களால் ஏற்படும் மரணங்களை கண்டறிந்து தடுக்க வேண்டும். குறிப்பாக தந்தங்களுக்காக யானை வேட்டையாடப்படுகிறதா? என பார்க்க வேண்டும். வேட்டையாடி யானை கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும்.

புலிகள் காப்பகம், சரணாலயங்கள், தேசிய பூங்காக்களில் யானைகளுக்கு பாதுகாப்பு உள்ளது. ஆனால் 60 சதவீத யானைகள் காப்புக்காடுகளில்தான் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. எனவே காப்புக்காடுகளில் வாழும் யானைகளைக் காக்க போதிய நிதி ஒதுக்கி கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். சட்ட விரோத மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழக்கின்றன.

விவசாயிகள் நேரடியாக மின்சார இணைப்பை வேலியில் தரக்கடாது. மாற்றாக, விட்டுவிட்டு மின்சாரம் வரும் வகையில் 'எனர்ஜசைர்' எனப்படும் கருவியைப் பொருத்த வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் ‘எனர்ஜசைர்' கருவியை அரசு வழங்க வேண்டும்.

ரயில் விபத்துகளில் சிக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும். யானைகள் நடமாடும் பகுதியில் ரயில் பாதை அமைக்கக் கூடாது. ஓசூரில் சாலை விபத்துகளில் சிக்கி யானைகள் உயிரிழந்துள்ளன. அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும்.

அதேபோல பன்றிகளை வேட்டையாட வைக்கும் ‘அவுட் காய்' யானைகளின் உயிரை பறிக்கிறது. வேட்டைக்காக ‘அவுட் காய்' தயாரிப்பவர்களைக் கண்டறிந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யானை மரணங்களில் மனித தலையீடு உள்ளதா? என ஆராய வேண்டும். கழிவுநீர் கலந்த நீரை குடிப்பது, பிளாஸ்டிக் உட்கொள்வதால் யானைகள் இறந்து போகிறதா? அல்லது வேறு ஏதாவது நோயால் இறக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.