விக்கிரவாண்டி இடைத்தேர்தலால் விவசாய உற்பத்தி செலவு அதிகரிப்பு


கட்சி ஒன்றின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் திமுக, எதிர்தரப்பில் பாமக, இவர்களுடன் நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. தமிழகமே இத்தொகுதியின் தேர்தல் முடிவை ஆவலோடு எதிர்பார்த்து வருகிறது.

தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் ஒவ்வொரு கூட்டத்திற்கும் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பெண்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

அவர்கள் வந்து செல்ல வாகன வசதி, வந்து போக செலவு, ஒரு நாளைய கூலி போன்றவற்றை கணக்கிட்டு வழங்குவதால் ஒருவரே ஒரு நாளில் 2-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கேற்கின்றனர். இதனால், விக்கிரவாண்டி பகுதியில் தற்போது விவசாயப் பணிகள் முடங்கியுள்ளன.

தேர்தல் முடிந்த பின்னரே மீண்டும் விவசாய வேலைகளுக்கு பெண்கள் திரும்புவர். ஆண்களும் ஏறக்குறைய இடைத்தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு சென்று விடுவதால் விவசாயப் பணிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

தற்போது ஒரு ஏக்கரில் களை பறிக்க சுமார் 15 ஆட்கள் தேவை என்ற நிலை நிலவுகிறது. பணியாளர் கிடைக்காமல் களைகள் வளர்வதால், தேர்தலுக்குப்பின் களை பறிக்க கூடுதலாக 5 ஆட்கள் தேவைப்படும். இதன்மூலம் ஏக்கருக்கு ரூ.1,000 வரையில் செலவு அதிகரிக்கும்.

இதேபோல் தொகுதி முழுவதும் பயிரிடப்பட்ட பயிர்களின் களைகளைப் பறிக்காமலும், சில இடங்களில் நடவு பணிகள் தொடங்காமலும் விவசாயப் பணிகள் முடங்கி கிடக்கின்றன.

அன்றாட விவசாயப் பணிகளுக்கு செல்வோரிடம் இதுபற்றி கேட்டால், “அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்; இப்ப எலெக் ஷன பார்ப்போம்” என்று சொல்லி பிரச்சார கூட்டங்களுக்கு சென்று வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் முடிந்து 10-ம் தேதிக்குப் பின் மீண்டும் விவசாய பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.