செல்போன் அடிமைத்தனத்திலிருந்து சிறாரை மீட்போம்!


தமிழகத்தில் சிறுவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இணையத்துக்கு அடிமையாகியிருப்பதாக வந்திருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 5 வயது சிறுவர்கள் உட்பட பல சிறார்கள் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நாம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய முக்கியப் பிரச்சினை இது.

வீடியோ கேம்கள் அறிமுகமான காலத்தில் குழந்தைகள் அதில் அதிக நேரம் செலவழிப்பதாகக் கவலைப்பட்ட பெற்றோர்கள் உண்டு. ஆனால், பெருந்தொற்றுக் காலத்தில் இணையவழிக் கல்வியின் வழியாக செல்போன்கள் குழந்தைகளின் கைகளில் இன்றியமையாத அம்சமாக மாறிவிட்டன. இந்தக் காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்பு நேரத்தைத் தாண்டி இணையத்தில் உலவுவது, கேம்ஸ் விளையாடுவது என்பன போன்ற பழக்கங்கள் குழந்தைகள் மத்தியில் பரவலாகிவிட்டன.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டதால் வகுப்பறைகளில் அதன் பாதிப்பை ஆசிரியர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். இணையப் பயன்பாட்டுக்கு அடிமையாகிவிட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கண்பார்வையில் பாதிப்பு, பசியின்மை, உடல் எடை இழப்பு என பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் அபாயம் இது. தூக்கத்தில்கூட செல்போனை இயக்குவது மாதிரியான கையசைவுகளுடன் குழந்தைகள் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.

குழந்தைகளிடம் ஏற்படும் அசாதாரணமான மாற்றங்களைப் பெற்றோர் உரிய நேரத்தில் கவனித்து உளவியல் நிபுணர்களிடம் அழைத்துச் சென்றால், நிச்சயம் இதற்கு தீர்வு உண்டு. உடனடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாகக் குழந்தைகளிடம் மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் உதவுவார்கள். இதற்குப் பெற்றோர்கள் செய்ய வேண்டியதெல்லாம் பிள்ளைகளுக்கென நேரம் ஒதுக்கி அவர்களை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வது, புத்தகங்கள் படிக்க ஊக்குவிப்பது, பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட அனுமதிப்பது எனக் கூடுதல் கவனம் செலுத்துவதுதான். பெற்றோர்கள் மட்டுமல்லாமல் பள்ளிகள், கல்வியாளர்கள், சமூகம், அரசு என அனைத்துத் தரப்பினரும் இதில் ஒன்றிணைந்து செயல்பட்டு நம் குழந்தைகளை மீட்டெடுப்போம்!

x