ஓபிஎஸ் என்ன நினைக்கிறாரோ அதற்கு செயல்வடிவம் கொடுப்பவர் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான். அப்படித்தான், “சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமை உரிய முடிவை எடுக்க வேண்டும்” என்று ஓபிஎஸ்சை சாட்சியாக வைத்துக் கொண்டு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசினார். அப்படி, ஓபிஎஸ்சின் மனசாட்சியாக பேசும் சையது கான், பணம் வாங்கிக் கொண்டு தேனி மாவட்ட உட்கட்சித் தேர்தலில் பதவிகளை பங்குபோட்டுக் கொடுத்ததாக வாட்ஸ் - அப் ஆடியோக்களை சிலர் அண்மையில் காற்றில் விட்டார்கள். “கம்பம் நகரில், வேட்பு மனுவே கொடுக்காத நபர்களுக்கெல்லாம் கட்சிப் பதவிகள் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேர்தல் நடத்தும் ஆணையர் மீதும், மாவட்டச் செயலாளர் சையது கான் மீதும் உரிய விசாரணைகள் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அந்த வாட்ஸ் - அப் ஆடியோக்களில் பேசியவர்கள், இதை ஓபிஎஸ் காதுக்கும் அனுப்பி இருக்கிறார்கள். மீண்டும் சையது கான் மாவட்டச் செயலாளர் பதவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஒரு தரப்பினர் இந்த விவகாரத்தை சீரியஸாகப் பரப்பினார்களாம். அவர்களின் எண்ணம் ஈடேறிவிடுமோ என கானும் சற்றே கலங்கிக் கிடந்த நிலையில், போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்ட 41 மாவட்டங்களின் அதிமுக செயலாளர்கள் பட்டியலில் சையது கானின் பெயர் முதலிடத்தை பிடித்திருக்கிறது.