மதுரையில் திருநங்கை தொடங்கிய ‘பிசியோதெரபிஸ்ட்’ மையம் - 50% கட்டணச் சலுகை


மதுரையில் திருநங்கையான பிசியோதெரபிஸ்ட் ஷோலு புதிதாக தொடங்கியுள்ள ராலக்ஸ் சிகிச்சை மையம்.

மதுரை: மதுரையில் திருநங்கையான ஷோலு, முட நீக்கியல் சிகிச்சை (பிசியோதெரபிஸ்ட்) மையத்தை தொடங்கி உள்ளார்.

மதுரை முனிச்சாலையைச் சேர்ந்தவர் திருநங்கை ஷோலு (33). இவர் பள்ளிக் கல்வித்துறை சார்பில் செல்லம்பட்டி ஒன்றிய வட்டார வள மையத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கான பிசியோ தெரபிஸ்ட்டாக தற்காலிகமாக பணிபுரிகிறார். மேலும் திருநங்கைகள், திருநம்பிகள் கல்வி கற்பதன் அவசியம், முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இது குறித்து ஷோலு கூறியதாவது: விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பள்ளி கல்வியை முடித்தேன். பின்னர், கோவை கல்லூரியில் பிசியோதெரபி படிப்பை படித்தேன். 2017-ல் மதுரையில் அப்போது ஆட்சியராக இருந்த வீரராகவ ராவிடம் வேலை கேட்டு விண்ணப்பித்தேன். அவர் செல்லம்பட்டி வட்டாரவள மையத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கான பிசியோ தெரபிஸ்ட்டாக தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணி வழங்கினார். தற்போது வரை அங்கு பணிபுரிகிறேன்.

தற்போது மக்களுக்கு சேவையாற்றும் வகையில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் ‘ராலக்ஸ் பிசியோதெரபிஸ்ட் மற்றும் அழகியல் சிகிச்சை மையம்’ தொடங்கி உள்ளேன். இங்கு அனைத்துத் தரப்பி னருக்கும் சிகிச்சை அளிக்கிறேன். இதில் சிறப்புக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோருக்கு 50 சதவீத சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை அளிக்கிறேன். மேலும், அவர்களுக்கு மருத்துவம் சார்ந்த அழகியல் சிகிச்சையும் அளிக்கிறேன். தமிழக அரசு தற்காலிகப் பணியை நிரந்தரப் பணியாக்கினால் மேலும் பலருக்கு சேவை புரிய வாய்ப்புக் கிடைக்கும் என்று கூறினார்.