வரலாற்றில் 2 பெரு வெள்ளங்களை தாங்கிய பாலாறு அணைக்கட்டு ரூ.200 கோடியில் புனரமைப்பு


2021-ம் ஆண்டு பாலாற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளம் வாலாஜா அருகே அணைக்கட்டு பகுதியை கடந்துஆர்ப்பரித்து செல்கிறது.(கோப்புப்படம்).

வேலூர்: ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு 2 பெரு வெள்ளங்களை தாங்கியுள்ளன. அணை கட்டப்பட்டு சுமார் 160 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரூ.200 கோடியில் புனரமைக்கப்பட்டு பலப்படுத்தப்படவுள்ளது.

வட தமிழ்நாட்டின் வளத்தை வாரி இறைக்கும் பாலாறு கடந்த 150 ஆண்டுகால வரலாற்றில் 2 பெரு வெள்ளங்களை பார்த்துள்ளன. பாலாற்றின் குறுக்கே ராணிப்பேட்டை மாவட்டம் திருமலைச்சேரி-புதுப்பாடி இடையே அணை கட்டப்பட்டு இன்றும் கம்பீரமாக நிற்கிறது. கர்நாடக மாநிலத்தில் உருவாகி ஆந்திர மாநிலத்தை கடந்து தமிழ்நாட்டில் படர்ந்து பயணிக்கும் பாலாறு, செங்கல்பட்டு மாவட்டம் வயலூர் அருகே கடலில் கலக்கிறது. பாலாறு பயண பாதையில் ஆற்காடு அருகே மிக முக்கியமான இடத்தை கடந்து செல்கிறது.

அந்த இடத்தில் இயற்கையாகவே வளைந்து செல்லும் பாலாற்றின் வெள்ளத்தை பாசனத்துக்காக பயன்படுத்தும் யோசனையை கடந்த 1,300 ஆண்டுகளுக்கு முன்பே நந்திவர்ம பல்லவன் செய்து காட்டியுள்ளார். இதற்காக, பொது ஆண்டுக்கு பின் 710-750-ம் ஆண்டு காலத்தில் பாலாற்றின் உபரிநீரை பயன்படுத்துவதற்கு வசதியாக காவேரிப்பாக்கம் ஏரியை கட்டி வைத்தார்.

இந்த ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்ட மகேந்திரவாடி ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பாலாற்றின் வெள்ள நீரை ஏரிக்கு திருப்பி பாசனத்துக்கு பயன்படுத்தி வெற்றிகண்ட பல்லவர்களின் வழியில் ஆங்கிலேயர்கள் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்திய பாலாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணையை கட்டி முடித்தனர். அணை கட்டும் திட்டம் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து ஆங்கிலேய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்ட நிலையில், நீர்ப்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

அதில், ஒன்றாக ஆந்திர மாநிலத்தில் உருவாகும் நீவா (பொன்னை ஆறு) ஆற்றின் குறுக்கே பொன்னை பகுதி மற்றும் பாலாற்றின் குறுக்கே புதுப்பாடி-திருமலைச்சேரி இடையே அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த 2 அணையின் கட்டுமான பணிகள் கடந்த 1854-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பொன்னை அணை முன்கூட்டியே கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது அணையாக கடந்த 1858-ம் ஆண்டு பாலாறு அணைக்கட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

ஏறக்குறைய 799 மீட்டர் நீளம் கொண்ட பொன்னை அணையில் 4 ஆயிரத்து 825 கனஅடி தண்ணீரை தேக்கி வைக்கவும் முடியும். மேலும், அணைக்கட்டில் இருந்து காவேரிப்பாக்கம் ஏரிக்கு தண்ணீரை திருப்பி விடுவதற்கான 2 மிகப்பெரிய மதகுகளையும் கட்டினர். அத்துடன், பாலாற்றின் வெள்ளநீரை செய்யாறு ஆற்றுடன் இணைக்கும் கால்வாய் திட்டத்தையும் ஆங்கிலேய அரசு நிர்வாகம் செய்தது. இப்படி, கடந்த 1858-ம் ஆண்டு தொடங்கி தற்போதுவரை பாலாற்றின் வெள்ளத்தை பாசன திட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கும் அணைக்கட்டாக பயன்பட்டு வருகிறது. 2 பெரு வெள்ளங்கள் பாலாறு அணை கட்டி முடிக்கப்பட்டு 166 ஆண்டுகள் ஆகின்றன. அணை பயன்பாட்டுக்கு வந்த பிறகு 2 பெரு வெள்ளங்களை இந்த அணை தாங்கியுள்ளது.

கடந்த 1903-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பேத்தமங்கலா அணை உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளம் வாணியம்பாடி அருகே நள்ளிரவில் 200-க்கும் மேற்பட்டோரின் உயிர்களை பலி கொண்டன. அந்த நேரத்தில் பாலாறு அணைக்கட்டில் உச்சபட்ச அளவாக 1 லட்சம் கன அடியை கடந்து வெள்ள நீர் சென்றுள்ளது. அதன்பிறகு 118 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு பாலாறு அணைக்கட்டில் அதிகபட்ச அளவாக 1 லட்சத்து 4 ஆயிரம் கன அடி தண்ணீர் கடந்து சென்றுள்ளது. இந்த 2 பெரு வெள்ளங்களையும் தாங்கி கம்பீரமாக இருந்து வரும் பாலாறு அணைக்கட்டு புனரமைக்கப்பட உள்ளன.

ரூ.200 கோடியில் புனரமைப்பு: பாலாறு அணைக்கட்டின் பலத்தை பாதுகாக்க ரூ.200 கோடியே 66 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதன்மூலம் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்துக்கு பிறகு பாலாறு அணைக்கட்டு முழுமையான அளவில் புனரமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘பாலாறு அணைக்கட்டில் பல்வேறு கால கட்டங்களில் சிறு, சிறு அளவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது, அணைக்கட்டின் மதகுகள், கால்வாய் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் நடந்துள்ளன. ஆனால், முழு அளவிலான புனரமைப்பு பணி இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அணைக்கட்டின் அடித்தள பகுதி பலப்படுத்தப்படும்.

ஏற்கெனவே உள்ள அடித்தள பகுதிக்கு அருகில் மற்றொரு பாதுகாப்பு அடித்தளம் அமைக்கப்படும். அணைக்கட்டின் மேல் பகுதியில் பலவீனமாக இருக்கும் இடங்கள் சீரமைக்கப்படும். அணையில் உள்ள மதகுகள் சரி செய்யப்படும். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியான அறிவிப்பு அரசாணையாக அறிவிக்கப்பட்டு, பின்னர் டெண்டர் உள்ளிட்ட வழக்கமான பணிகளாக நடைபெறும்’’ என்றனர்.

இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் கூறும்போது, ‘‘ஆங்கிலேயர்கள் கட்டிய அணையை இவர்கள் முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டனர். மாவட்டத்தின் பிரதான அணையால் காவேரிப்பாக்கம், மகேந்திரவாடி ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி பாசன வசதி அளிக்கப்பட்டது. சேதமடைந்து காணப்படும் அணை சீரமைக்கப்படும் என்ற அறிவிப்பால் காவேரிப்பாக்கம் ஏரிக்கு வரும் காலங்களில் அதிகப்படியான நீர்வரத்து கிடைக்கும்’’ என்றார்.