திருமாவளவனுக்கு கைகொடுத்த காட்டுமன்னார்கோவில்; அதிர்ச்சி அளித்த அரியலூர் @ சிதம்பரம் தொகுதி


அரியலூர்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் திருமாவளவன் சொந்த மாவட்டமான அரியலூரில் குறைவான வாக்குகளையே பெற்றார். அதே நேரத்தில் கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி களில் அதிக வாக்குகளை பெற்றதால் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் கடலூர்மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக ளும், அரியலூர் மாவட்டம் அரியலூர், ஜெயங் கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளும், பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியும் உள்ளன.

இதில், குன்னம்சட்டப்பேரவைத் தொகுதி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் கிராமங்களை உள்ளடக்கியதாகும். இந்த சட்டப்பேரவைத் தொகுதியில்தான் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும், இந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமம்தான், திருமாவளவனின் சொந்த ஊராகும்.

இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் 5,05,084 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக, அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 4,01,530 வாக்குகளை பெற்றார். இதில் 1,03,554 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டு மன்னார்கோவில், புவனகிரி மற்றும், பெரம் பலூர் மாவட்டத்தை உள்ளடக்கிய குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் விசிக வேட்பாளர் திருமாவளவன் அதிமுக வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்றார்.

ஆனால், அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்டஅரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் திருமாவளவனைவிட, அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.

அதாவது, காட்டுமன்னார்கோவில் (வித்தியாசம்49,436), சிதம்பரம் (32,481), புவனகிரி (22,765),குன்னம் (8,885) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி களில் விசிக வேட்பாளர் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார். அதிலும், மொத்த வாக்கு வித்தியாசத்தில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்ட வாக்குகள் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் கிடைத்துள்ளன.

அதேசமயம், அரியலூர் (வித்தியாசம் 9,839),ஜெயங்கொண்டம் (1,379) ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் திருமாவளவனை விட அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.

விசிக வேட்பாளர் திருமாவளவனுக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளும், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியும் கைகொடுத் துள்ளன.

அவரது சொந்த மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதி களில் வாக்குகள் குறைந்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக வாக்குகள் விவரம் (தபால் வாக்குகள் தவிர்த்து):

  • குன்னம்: திருமாவளவன் (விசிக) - 85,495 / சந்திரகாசன் (அதிமுக)- 76,610
  • அரியலூர்: திருமாவளவன் (விசிக)- 78,793 / சந்திரகாசன் (அதிமுக)- 88,632
  • ஜெயங்கொண்டம்: திருமாவளவன் (விசிக)- 76,486 / சந்திரகாசன் (அதிமுக)- 77,865
  • புவனகிரி: திருமாவளவன் (விசிக)- 87,150 / சந்திரகாசன் (அதிமுக)- 64,385
  • சிதம்பரம்: திருமாவளவன் (விசிக)- 80,922 / சந்திரகாசன் (அதிமுக)- 48,441
  • காட்டுமன்னார்கோவில்: திருமாவளவன் (விசிக) - 93,005 / சந்திரகாசன் (அதிமுக)- 43,569