மத்திய மண்டலத்தில் 7 மக்களவைத் தொகுதிகளில் 5-ல் புதியவர்கள் வெற்றி!


திருச்சி: மத்திய மண்டலத்தில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளில் புதிதாக களமிறங்கிய வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திருச்சி மத்திய மண்டலத்தில் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், கரூர், சிதம்பரம் ஆகிய 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

இதில், திருச்சி மக்களவைத் தொகுதி கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிட்டு 4.60 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை இந்தத் தொகுதி திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.

இங்கு அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ முதன் முறையாக தேர்தலில் களம் கண்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையாவை 3.13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, மக்களவைக்குச் செல்கிறார். இதேபோல தஞ்சாவூர் தொகுதியில் கடந்த முறை எம்.பியாக இருந்த எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்துக்கு(திமுக) இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படாமல், தஞ்சாவூர் மேற்கு ஒன்றியச் செயலாளரான ச.முரசொலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

கட்சியினர் மத்தியிலேயே அதிகம் வெளிச்சம் பெறாதவvராக இருந்த இவர், தற்போது நடைபெற்ற தேர்தலில் 3.19 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். நாகை மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

ஏற்கெனவே இங்கு எம்.பி.யாக இருந்த எம்.செல்வராசுவுக்கு உடல்நிலை சரியில்லாததால், கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளரான வை.செல்வராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட இவர், 2.08 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக மக்களவைக்குச் செல்கிறார்.

கடந்த முறை திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி, இந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் பலரும் இங்கு போட்டியிட விரும்பிய நிலையில், தொகுதிக்கு சிறிதும் தொடர்பில்லாத கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்த ஆர்.சுதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக, பாமக வேட்பாளர்கள் உள்ளூர்காரர்கள், மக்களிடம் நன்கு அறிமுகமானவர்கள் என்ற நிலையில், தேர்தல் அரசியலுக்கு புதியவரான சுதா, ஏறத்தாழ 2.71 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், இந்த முறை பாஜக கூட்டணி சார்பில் களம் கண்டார். அவரை எதிர்த்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான
கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிட்டார். முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட இவர், 3.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கரூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் செ.ஜோதிமணி ஆகியோர் மீண்டும் அதே தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.