‘மதுரை மீனாட்சி கோயில் கல்வெட்டுகளில் அரிய வரலாற்று தகவல்கள்!’


கோயிலில் படியெடுக்க ப்பட்ட கல்வெட்டுகளில் ஒன்று.

மதுரை: முற்காலத்தில் சைவ சமயக் கொள்கைகள், நற்பண்புகளை மக்களிடம் கொண்டு செல்ல சைவ நூல் புலமை, ஒழுக்கம், துறவுள்ளம் உடைய பெரியோரை தலைவராக நியமித்து சைவ மடங்களை ஏற்படுத்தினர் இடைக்கால மன்னர்கள். மேலும் மடங்களுக்கு தேவையான இடம், பொருள் என பல தானங்கள் மற்றும் கொடைகளை வழங்கி உள்ளனர்.

அத்தகைய மடங்களை பற்றிய பல அரிய வரலாற்று தகவல்கள் மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகளில் உள்ளதாக மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மீ.மருதுபாண்டியன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறிய தாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் படியெடுத்து படிக்கப்படாத 456 கல்வெட்டுகள், இந்துசமய அறநிலையத் துறை ஏற்பாட்டில் ஓய்வுபெற்ற தொல்லி யல் அலுவலர், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையச் செயலர் சொ.சாந்தலிங்கம் தலைமையில் படியெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. அத்தகைய கல்வெட்டுகளில் பல்வேறு சைவ மடங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

அவை தட்சிண கோளக்கிமடம், புவனேகவீரன்மடம், திருஞான சம்பந்தன் மடம், சுந்தரபாண்டியன் மடம், வீரசோமேஸ்வரனால் ஏற்படுத்தப்பட்ட கோளகிமடம் இருந்ததாக கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகளில் பல மடங்களைப் பற்றிய இதுவரை வெளிவராத பல வரலாற்று குறிப்புகள் உள்ளன.

மேலும், அம்மடங்களுக்கான செலவினங்களுக்கும், அங்கு வாழும் தபசியர்களின் அன்றாட உணவுக்கும் மன்னர்கள் பல கொடைகளையும், தானங்களையும் வழங்கிய அரிய தகவல்கள் கிடைத்துள்ளன என்று கூறினார்.

இதுபற்றி அவர் மேலும் கூறிய தாவது: தட்சிண கோளக்கிமடம், திருவா ரூரில் இன்றளவும் சிறப்புற்று விளங்கும் மடம். மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகளில் 2 இடங்களில் இம்மடத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.1192-ல் சடையவர்மன் முதலாம் குலசேகரபாண்டியன் கொடையாக இம்மடத்துக்கு கொடுத்த தகவல் சொக்கநாதர் சந்நிதியின் எதிர்புறமுள்ள கிழக்கு ராஜகோபுரத்தின் இரண்டாம் தள தூணில் பொறிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகளில் உள்ள வரலாற்றுத்
தகவல்களை படியெடுக்கும் ஓய்வுபெற்ற தொல்லியல் அலுவலர்
சொ.சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர்.

புவனேக வீரன் மடம்: கி.பி.13-ம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண் டியன் காலத்திய கல்வெட்டு சொக்கநாதர் சந்நிதி வடக்கு திருச்சுற்றின் இரண்டாம் பிரகாரத்தின் வட சுவரில் உள்ளது.

சைவ மடங்களில் மிகவும் சிறப்பு பெற்றது புவனேக வீரன் மடம். கி.பி.1192 சடையவர்மன் முதலாம் குலசேகரனின் ஆட்சிக்காலத்தில் மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் என்கிற அவனிவேந் தராமன் கோபுரத்தின் இரண்டாம் தள துாண்களில் இம்மடத்துக்கு ஒருவேலி நிலம் கொடுக்கப்பட்ட தகவல் உள்ளது.

மேலும் கி.பி.1444-ல் மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சந்நிதியின் நுழைவுவாயில் வலப்புறமுள்ள குமுதம் பத்ம வரிசையில் விசுவநாதன் மகன் நரசிம்மன் இக்கோயில் இறைவனுக்கு நவரத்ன பதக்கம் சாத்திய தகவலும், அதற்காக திருநாமத்துக்காணியாக தனிச்சி யமான திருஞானசம்பந்தநல்லுாரில் நிலங்கள் கொடுத்த தகவல் உள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் தெற்குச் சுவாில் உள்ள ஒரு கல்வெட்டில் (கி.பி.1,514) கிருஷ்ணதேவராயா் காலத்தில் அவர் பிறந்த புனர்பூச நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜை நடத்தி இறைவனை திருவுலா எடுத்துவந்து கிருஷ்ணதேவராயர் கட்டிய எழுகடல் தெரு முதல் பிரதட்சணமாக வந்து தாம் கட்டிய மண்டபத்திலும் திருக்கண் சாத்திவர பண்டாரத்திலே வைத்த பணம் 500-ம், தனிச்சியம் ஆன திருஞானசம்பந்தநல்லுாரில் நிலமும் கொடுத்த தகவல் உள்ளது.

சுந்தரபாண்டியன் மடம்: பாண்டிய மன்னர்களில் சிறந்து விளங்கிய சுந்தரபாண்டியனின் ஆணைப்படி ஒரு மடம் நிறுவப்பட்டது. அம்மடத்துக்கு சுந்தரபாண்டியன் தனது 10-ம் ஆட்சியாண்டான கி.பி.1226-ல் நிலம் கொடுத்த தகவல் உள்ளது.

இக்கல்வெட்டு மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் என்றழைக்கப்படும் அவனி வேந்தராமன் கோபுரத்தின் மேல் இரண்டாம்தள தூண்களில் உள்ளது. இதேபோல், கோளகிமடம், பிக்ஷா மடம், கோ மடம் பற்றி இதுவரை வெளிவராத பல தகவல்கள் கல்வெட்டில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.